என் மலர்
ஆசிரியர் தேர்வு
- அமெரிக்காவில் பல்வேறு இணையதளங்கள் மூலமாக போலியான இந்திய மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன.
- இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் இந்திய மருந்துகளுக்கு அமெரிக்காவில் எப்போதும் கிராக்கி இருக்கிறது.
அமெரிக்காவில் இந்திய மருந்துகள் அதிக மதிப்பும் தேவையும் பெறுவதற்குக் காரணம் அவற்றின் உயர்தர தரநிலைகள், குறைந்த செலவு. மற்றும் நம்பகமான உற்பத்தித் திறன் ஆகும்.
உலகத் தரச் சான்றிதழ்களுடன் தயாரிக்கப்படும் இந்திய மருந்துகள், தரத்தில் எந்த சமரசமும் இன்றி மலிவான சிகிச்சையை வழங்குகின்றன. இதனால் அமெரிக்காவின் சுகாதார அமைப்பில் இந்திய மருந்துகள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
இந்தநிலையில் அமெரிக்காவில் பல்வேறு இணையதளங்கள் மூலமாக போலியான இந்திய மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன. மேலும் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொண்ட 10 பேர் உயிரிழந்தது குறித்து அந்த நாட்டின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்தது.
இதற்காக இந்தியாவின் அமலாக்கத்துறையிடம் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தகவல்கள் பெற்றது. அதன்படி இந்தியாவில் இயங்கி வந்த ஒரு சர்வதேச குற்றவியல் கும்பலுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலமாக அமெரிக்காவில் அந்த போலி மருந்துகளை சட்டவிரோதமாக விற்றது தெரிய வந்தது.
இந்த இணையதளங்கள் முறையான டாக்டர் பரிந்துரை சீட்டு இன்றி, போலியான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளன. இந்த இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலி இந்திய மருந்துகளை விற்ற 200 இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டன. நியூயார்க்கில் இருந்த இந்தியர்கள் உள்பட 4 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகின்றது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பற்றி ஆலோசனை நடத்துவதற்காக அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கட்சி நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் அகமது மிர், வரும் தேர்தலில் மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. இதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கடந்த 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் உடன் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றது.
- 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.
ஹராரே:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இப்போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், நடப்பு தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி இந்தப் போட்டி தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி இதுவரை தோல்வி எதையும் சந்திக்கவில்லை. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி 5 முறை 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது.
இங்கிலாந்து அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 1998-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்றது. இங்கிலாந்து அணியும் தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. ஆனாலும் போட்டி உள்ளூரில் நடப்பதால் இந்தியா மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு அணி 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்னும், லாரா வோல்வார்ட் 44 ரன்னும், லிஸ்ஸி லீ 37 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சினேலி ஹென்றி 15 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜார்ஜியா வோல் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
2வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில் ஜார்ஜியா வோல் 79 ரன்னில் அவுட்டானார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
2022-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் இருதரப்பிலும் சுமார் 5 லட்சம் பேர் பலியானதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்தனர் என கூறப்படுகிறது.
இந்தப் போரில் ரஷியா சார்பில் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் சார்பில் 1.4 லட்சம் பேரும் உயிரிழந்து இருக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை கூறுகிறது.
- மணிப்பூரில் நேற்றுதான் குடியரசுத் தலைவர் வாபஸ் வாங்கப்பட்டது.
- பாஜக தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.
மணிப்பூரில் புதிய அரசு அமைந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
சூரசந்த்பூர் மாவட்டத்தில் துய்போங் பகுதியில் புதிய அரசுக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க முயன்ற பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4 அன்று பா.ஜ.க தலைமையிலான புதிய அரசு பதவியேற்றது. யும்னம் கெம்சந்த் சிங் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நெம்சா கிப்ஜென் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். குக்கி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் புதிய அரசில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி-ஜோ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சமூகத்தின் ஒப்புதல் இன்றி அவர்கள் அரசில் இணைந்தது "துரோகம்" என போராட்டக்காரர்கள் கருதுகின்றனர்.
மாலையில் போராட்டம் தீவிரமடைய துய்போங் பகுதியில் போராட்டக்காரர்கள் டயர்களுக்குத் தீ வைத்து சாலைகளை மறித்தனர். மேலும் குக்கி-ஜோ குழுக்களின் கூட்டமைப்பு நாளை குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் 12 மணி நேர முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, குக்கி சமூகத்தைச் சேர்ந்த சில அமைப்புகளும் பிரிவினரும், மக்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று குக்கி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
மறுபக்கம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.
- காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.
பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.
இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.
இது சம்பந்தமாக பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
ப்ளு போன்ற அறிகுறிகள் (II) இருமல், சளி. காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும்.
ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
- 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இதனை தொடர்ந்து 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. 'தாய் கிழவி' படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 'தாய் கிழவி' படத்தின் செயற்கைக்கோள் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.
இந்நிலையில், தாய் கிழவி படத்தின் "தாய் கிழவி வாரா.." பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
- ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
- ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
குப்பையில் கிடந்த 45 சவரன் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த தூய்மைப் பணியாள் பத்மாவின் செயலை பாராட்டி, அவருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து நடிகர் பார்த்திபன் கௌரவப்படுத்தினார். இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தங்கத்தின் மதிப்பு ஏற ஏற, மனிதத்தின் மரியாதை குறைந்துகொண்டே போய், ஒரு கிராம் ஒரு லட்ச ரூபாயை நெருங்கும்போது, லட்சக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதியாகிவிடும்.
வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா அவர்கள், குப்பையில் கிடந்த 360 கிராம் நகையை உரியவரிடம் சேர்ப்பித்து, அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
என்னை Chief Guest-ஆக அழைத்த எத்திராஜ் கல்லூரிக்கு, நான் வெறும் Guest-ஆகவும் Chief-ஆக திருமதி பத்மாவை அழைத்துச் சென்று, பாதணி அணிவித்து, பாத பூஜை செய்து, புடவை போர்த்தி, 'உலக அழகி' என்ற கிரீடம் சூட்டி நான் பேரழகன் ஆனேன்... என்று கூறியுள்ளார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
- தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை.
சேலம்:
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மையக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. இன்னும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாக பல கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. வருகிற சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெல்லும்.
மதுரையில் வருகிற 28-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி அடைவோம் என்று கூறி வருகிறார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 180 தொகுதிக்கு மேல் வெற்றி அடையும் என்று கருத்துக்கணிப்பு கூறி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவி கேட்பதால் கனிமொழி டெல்லி சென்று ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர்களுக்குள் கூட்டணி குழப்பம் இருக்கிறது.
மத்திய அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கிய நிதியை தமிழக அரசு முழுமையாக செலவு செய்யவில்லை. அந்த நிதியை தமிழக அரசு திரும்ப அனுப்பி உள்ளது. இது நிர்வாகத் திறமை இல்லையா? தாழ்த்தப்பட்ட மக்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா? தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அக்கறை இல்லையா?.
5 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 575 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் 70 சதவீத வாக்குறுதி கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் வருவது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம். தலைவர் தகுதியை வளர்த்துக் கொள்வது தம்பி விஜய்யின் கடமை. ஆனால் எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்
- நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து சர்ச்சையில் சிக்கியது.
- வரும் நாட்களில் தனது சேவையை குறைத்து கொள்வதாக விமான இயக்குனரகத்திடம் இண்டிகோ தெரிவித்திருந்தது.
நாட்டின் முன்னனி விமான சேவை நிறுவனமாக இண்டிகோ உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் விமானிகள் பற்றாக்குறை காரணமாக உள்ளூர், வெளிநாடுகளுக்கு இயக்கப்படவிருந்த நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து சர்ச்சையில் சிக்கியது.
இதனால் வரும் நாட்களில் தனது சேவையை குறைத்து கொள்வதாக விமான இயக்குனரகத்திடம் இண்டிகோ தெரிவித்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக தொலைத்தூர சேவைகளை ரத்து செய்து இண்டிகோ அறிவித்துள்ளது. டெல்லி-லண்டன், டெல்லி-மான்செஸ்டர் உள்ளிட்ட விமான சேவைகளை குறைத்து கொள்வதாகவும் டெல்லி-கோபன்ஹேகன் விமான சேவையை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
- டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார்.
- இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா முக்கியமானவர் என்றார்.
மும்பை:
டி20 உலகக் கோப்பை வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா பிப்ரவரி 7-ம் தேதி மும்பையில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார். ஐ.சி.சி. ரிவ்யூ நிகழ்ச்சியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது:
அபிஷேக்கின் முதல் ஐபிஎல் பயிற்சியாளர் நான்தான். 17 வயதில் அறிமுகமாகி முதல் பந்திலேயே நேராக பவுலர் தலைக்கு மேல் பவுண்டரி விளாசினார். அந்த கிளாசிக்கல் ஸ்ட்ரெயிட் பேட் ஷாட் இவர் சாதாரண வீரர் அல்ல என்பதை எனக்குக் காட்டியது.
அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலேயே தக்கவைக்க வேண்டும் என உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினேன். அவரை டிரேட் செய்ய வேண்டாம் என பலமுறை சொல்லிப் பார்த்தேன். இவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் என அப்போதே தெரிந்தது. இப்போது அதுதான் நடந்திருக்கிறது.
அவர் இந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன் குவிப்பவராக இருப்பார், தொடரிலேயே சிறந்த வீரராகவும் மாறக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர். அவர் அப்படி விளையாடினால் இந்திய அணியை தோற்கடிப்பது இன்னும் கடினமாகும். இந்த உலகக் கோப்பையில் அபிஷேக் முக்கியமானவர் என தெரிவித்தார்.






