என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • நடிகர் விஷால் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • விஷாலுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து, இந்த நடிகை, அந்த நடிகை என பல நடிகைகளுடன் விஷால் காதல் என கிசுகிசுக்கள் வந்தன.

    இதற்கிடையே, பல்வேறு விஷயங்கள் காரணமாக முடங்கி இருந்த நடிகர் சங்க கட்டுமானப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பரில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில் முரட்டு 'சிங்கிளாக' வலம் வந்த விஷால், சமீபத்தில் தனக்கு திருமணம் நடைபெறப்போவதாக அறிவித்தார். முன்னணி கதாநாயகியான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், விரைவில் தம்பதியாக நாங்கள் வலம் வருவோம். ஆகஸ்டு 29-ந் தேதி எனது பிறந்தநாள் அன்று திருமணத்தையும் முடிவு செய்துள்ளோம். அனைவரும் வந்து எங்களை வாழ்த்த வேண்டும் என்று கூறியிருந்தார். விஷாலின் இந்த அறிவிப்பை தொடர்ந்து அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, நடிகர் விஷால் இன்று 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, பிறந்த நாள் அன்று திருமணம் என்று விஷால் அறிவித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

    வழக்கம்போல் இந்த முறையும் விஷால் ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர். 

    • பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் தீலிப்குமார் கூறும்போது, "தற்போது, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி,

    சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்" என்றார்.

    • ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • அரசு அறிவிப்பின்படி பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தலாம்.

    டோக்கியோ:

    தற்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆனால் அவற்ரை அதிக அளவு பயன்படுத்துவதால் உடல்நலக் குறைபாடுகள் மட்டுமின்றி தேவையற்ற சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் இயற்கை எழில் கொஞ்சும் பாரம்பரிய நகரான டோயோக்கேவில் உள்ள பொதுமக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அந்த நகரின் மேயரால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக பாலியல் சம்பவங்கள் மற்றும் கடத்தல் வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்றச் சம்பவங்கள் கூடுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு அறிவிப்பின்படி நகர பொதுமக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டும் ஸ்மார்ட்போன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு உள்ளது.

    தேவைப்பட்டால் தொலைபேசி மற்றும் மற்ற பிற தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • செர்பியாவின் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டாவை 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்நிலையில், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் 3-வது சுற்றை எட்டுவது இது 75-வது முறையாகும். இது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 74 தடவை 3-வது சுற்றுக்கு வந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

    • ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது.
    • கிடைக்கும் வருவாயை பிரித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு.

    இந்திய பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் மற்றும் சீனா செல்கிறார். ஜப்பானில் நடைபெறும் இந்தியா-ஜப்பான் இருநாட்டின் 15ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்கிறார். அப்போது ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ரியோசெய் அகாசவா, இன்று அமெரிக்கா செல்ல இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

    அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து தப்பிக்க, ஜப்பான் 550 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய சம்மதம் தெரிவித்தது. அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பிரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த செல்ல இருந்தார்.

    பேச்சுவார்த்தை முடிவில் 550 பில்லியன் டாலர் முதலீடு திட்டத்தை முறையாக உறுதிப்படுத்த இருந்தது.

    அமெரிக்க தரப்புடன் ஒருங்கிணைப்பின் போது நிர்வாக மட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    • பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
    • இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் கடைசியாக கிங்ஸ்டன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    அதனை தொடர்ந்து பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது.

    • உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை.
    • நாங்கள் முடிவு செய்வதில்லை.

    பாஜக கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா உள்ளார். இவர் இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக வேறு தலைவர் நியமிக்கப்பட வேண்டியது உள்ளது. அடுத்த தேசிய தலைவரை தேடும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவராக இருப்பார். இதனால் பாஜக தலைவர் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும். ஆர்எஸ்எஸ் கைக்காட்டும் நபர்தான் பாஜக-வின் தேசிய தலைவராவார் என்ற பார்வையும் உள்ளது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 3 நாள் விழா நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசும்போது கூறியதாவது:-

    உங்களுடைய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஏதும் சொல்லப் போவதில்லை (நகைச்சுவையாக). நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் முடிவு செய்வதாக இருந்தால், இவ்வளவு காலம் எடுத்திருக்கமாட்டோம். ஆர்எஸ்எஸ் அமைப்பை இயக்குவதில் நான் நிபுணர். அரசை இயக்குவதில் பாஜக நிபுணர். நாங்கள் ஒருவருக்கொருவர் கருத்துகளை மட்டுமே சொல்ல முடியும். எங்கேயும் மோதல் இல்லை. ஆனால், எல்லா பிரச்சனையிலும் ஒரே பக்கமாக இருக்கும் என்பது சாத்தியமற்றது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் நம்புகிறோம்.

    இவ்வாறு மோகன் பகவத் தெரிவித்தார்.

    • இந்திய இளைஞர் அணி,16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கசகஸ்தானில் நடைபெற்றது.
    • இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.

    இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அபார வெற்றி பெற்று, பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியது.

    டிராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவு

    தனிஷ்கா – தங்கப் பதக்கம்

    நிலா ராஜா பாலு – வெள்ளிப் பதக்கம்

    அந்த்ரா ராஜ்சேகர் – வெண்கலப் பதக்கம்

    டிராப் யூத் மகளிர் அணி – தங்கப் பதக்கம்

    டிராப் யூத் ஆண்கள் தனிநபர் பிரிவு

    யுகன் S M – தங்கப் பதக்கம்

    டிராப் யூத் ஆண்கள் அணி – தங்கப் பதக்கம்

    இந்த வெற்றியின் சிறப்பம்சம், இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.

    மேலும், நிலா, தமிழ்நாடு மாநில அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மகள்.

    அந்த்ரா ராஜ்சேகர், பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அவர்களின் மகள்.

    இளம் வீரர்கள் பெற்ற இந்த அற்புத சாதனை, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

    • மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
    • முதலமைச்சரால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக தாகவல்.

    பீகாருக்கு சென்று திரும்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய உலக ஒழுங்கில் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன.
    • இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் வருத்தத்தை அளிக்கிறது.

    இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.

    மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 27-ந்தேதி அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது. அதன்படி, இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது.

    50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    மொத்தம் 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில்,

    இன்றைய உலக ஒழுங்கில் வர்த்தகம், முதலீடு மற்றும் நிதி ஆகியவை ஆயுதமயமாக்கப்பட்டுள்ளன. இந்தியா கவனமாக நடக்க வேண்டும்.

    இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரிகள் வருத்தத்தை அளிக்கிறது. எந்தவொரு ஒற்றை வர்த்தக கூட்டாளியையும் சார்ந்திருப்பதை குறைக்க இந்தியாவுக்கு இது ஒரு தெளிவான விழிப்புணர்வு அழைப்பு.

    நாம் எந்த ஒரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்கக்கூடாது. கிழக்கு, ஐரோப்பா, ஆப்பிரிக்காவைப் பார்த்து, அமெரிக்காவுடன் தொடர்வோம். ஆனால் நமது இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான 8–8.5% வளர்ச்சியை அடைய உதவும் சீர்திருத்தங்களை கட்டவிழ்த்து விடுவோம்.

    ரஷியாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்களை இந்தியா வாங்குவதை அமெரிக்க உயர் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
    • இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார். அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.

    அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு நேற்று முதல் 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இதனிடையே, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்களை இந்தியா வாங்குவதை அமெரிக்க உயர் அதிகாரிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், உக்ரைனில் நடைபெறும் மோதலை 'மோடியின் போர்' என்றும் இந்தியர்கள் திமிர்பிடித்தவர்கள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பீட்டர் நவேரா கூறியுள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பீட்டர் நவேரா, உக்ரைனில் நடைபெறும் மோதல் 'மோடியின் போர்'. இந்தியா குறைந்த விலையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்குவது அந்நாட்டின் ஆக்கிரமிப்பை தூண்டிவிடுவதோடு, அமெரிக்க வரி செலுத்துவோர் மீது சுமையை அதிகரித்துள்ளது. எங்களது வலியுறுத்தலை ஏற்று ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியில் 25 சதவிகிதத்தை குறைப்போம். இந்தியர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் திமிர்பிடித்தவர்களாக இருப்பது எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள், எங்களிடம் அதிக வரிகள் இல்லை. இது எங்கள் இறையாண்மை. நாங்கள் விரும்பும் எவரிடமிருந்தும் எண்ணெய் வாங்கலாம் என்று கூறுகிறார்கள். இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதன் மூலம், தனக்குக் கிடைக்கும் பணத்தை ரஷியா அதன் போர் இயந்திரத்திற்கு நிதியளிக்கிறது. உக்ரேனியர்களைக் கொல்கிறது. இந்தியாவின் செயலால் அமெரிக்காவில் உள்ள அனைவரும் பாதிப்பைச் சந்திக்கிறார்கள். மோடியின் போரால் அமெரிக்கா வணிகம், நுகர்வோர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய பிரிவுகளில் அமெரிக்கா பெரும் இழப்பைச் சந்திக்கிறது என்று கூறியுள்ளார்.

    நவரே, இந்தியா மீது குற்றம்சாட்டுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக அவர் இந்தியாவை 'வரிதழ்களின் மகாராஜா' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயன்றது.
    • கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி பவித்ரா (38), மகள்கள் சவுத்தியா (8), சவுமிகா (6).

    ராஜேஷ் குமார் கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் குடும்பத்தோடு தங்கி சிவில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில், திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்திற்கு செல்வதற்காக ராஜேஷ்குமார் மற்றும் குடும்பத்தினர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் அவர்கள் காரில் பயணம் செய்தனர். அப்போது, மழை காரணமாக கார் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.

    இதில் காரில் பயணித்த ராஜேஷ்குமார் அவருடைய மனைவி, மகள்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகிலிருந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்ட த்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு 4 பேரின் உடல்களை எடுத்து வரும் பணியில் சத்தீஸ்கர் மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவருடைய சொந்த ஊரில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×