என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5% ஆக உயர்ந்துள்ளது.
    • 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதமாக இருந்த இந்த அளவு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்வதற்காக இந்தியா மீது அமெரிக்காவி 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது.

    கடந்த ஜூலை மாதத்தில் உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5% என அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான NaftoRynok கூறியுள்ளது.

    ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், உக்ரைனின் டீசல் விநியோகத்தில் இந்தியாவின் பங்கு 10.2 சதவீதமாக உயர்ந்தது. 2024 ஜூலையில் வெறும் 1.9 சதவீதமாக இருந்த இந்த அளவு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.

    • விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

    விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    * திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே.சாலை சந்திப்பிலிருந்து (வலது புறம் திரும்பி), வி.எம்.தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை (வலது புறம் திரும்பி), பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி.ராமசாமி சாலை (இடது புறம் திரும்பி), செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, சீனிவாசா அவென்யூ (இடது திருப்பம்), ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, திருவேங்கடம் தெரு (இடது புறம் திரும்பி), வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை (வலது புறம் திரும்பி), ஆர்.கே.மடம் சாலை (இடது புறம் திரும்பி), தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை (இடது புறம் திரும்பி), கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே.சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை

    * சிலை ஊர்வலம் ரத்னா கபே சந்திப்பை கடக்கும்போது, ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    * சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும்போது, ஐஸ்ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு-காமராஜர் சாலை வழியாக திருப்பிவிடப்படும் அல்லது இடதுபுறம் ஜி.ஆர்.எச். சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.

    * விநாயகர் சிலை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

    இவ்வாறு போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

    • கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.
    • இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய மாபெரும் ஹிட் பாடலான "கல்யாண மாலை" பாடல் இடம்பெற்றிருந்தது.

    நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.

    விழாவின்போது, ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை நடத்தினர்.

    இதில், டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் "ப்ரோ கோட்" என்ற திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் ரவி மோகன்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, ஷரத்தா ஸ்ரீனாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    "ப்ரோ கோட்" படத்தின் ப்ரோமோ வீடியோவை ரவி மோகன் ஸ்டுடியோஸ் வெளியிட்டிருந்தது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இந்த ப்ரோமோ வீடியோவில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகிய மாபெரும் ஹிட் பாடலான "கல்யாண மாலை" பாடல் இடம்பெற்றிருந்தது.

    இதனால், இப்பாடலை பயன்படுத்த அனுமதி வழங்கிய இளையராஜாவிற்கு நன்றி கூறி ப்ரோ கோட் பட இயக்குனர் கார்த்திக் யோகி சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில்," ப்ரோ கோட் படத்தின் PROMO வீடியோவின் முதுகெலும்பாக இருக்கும் தலைசிறந்த படைப்பான 'கல்யாண மாலை'யை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி ராஜா சார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு 2 நாட்கள் நடக்கிறது.
    • பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    மாஸ்கோ:

    சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுகிறார். இந்த தகவலை கிரெம்ளின் மாளிகையின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யுரி உஷா கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'ஒன்றாம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சந்திப்புக்குப் பின் உடனடியாக எங்கள் அதிபர் (புதின்) மற்றும் இந்திய பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு நடக்கிறது' என்று கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, இதில் முக்கியமானது என்னவென்றால், வரும் டிசம்பரில் நமது அதிபரின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார். இதன்மூலம் ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதும் உறுதியாகி உள்ளது.

    • தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும்.
    • அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்திய உணவு உற்பத்தி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பேசியதாவது:

    தென்னிந்தியாவில் புல்லட் ரெயில் சேவை கொண்டு வரப்படும். அதற்கான கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இது ஐதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூருவை இணைக்கும் வகையில் அமையும். இந்த சேவையால் 4 நகரங்களைச் சேர்ந்த 5 கோடி மக்கள் பயன்பெறுவர்.

    புல்லட் ரெயில் சேவை தவிர, தென் மாநிலங்கள் தங்களது சாலைகளை பெரிய அளவில் மேம்படுத்த போகிறது. சர்வதேச தரத்துக்கு இணையாக தொலைதூர சாலைகளை கூட சிறப்பாக பராமரிப்பது இதில் அடங்கும். இந்தியாவின் பழங்கள் விளைச்சலில் ஆந்திர பிரதேசம் 25 சதவீதம் பங்களிக்கிறது. விவசாயிகளுக்கான புதிய சர்வதேச சந்தைகளை தேடி வருகிறோம்.

    உணவு பதப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய துறைகளில் நிறுவனங்களை நிறுவ முதலீட்டாளர்களை வலியுறுத்த புதிய முயற்சிகளுக்கான அனுமதிகளை ஆந்திர அரசு விரைவுபடுத்தும். அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கால் ஈர்க்கப்பட்ட ஒரு திட்டமான சிலிகான் வேலி திட்டம் அமராவதியில் நிறுவப்படுவதற்கு, எதிர்கால மேம்பாடு குறித்து பில் கேட்சுடன் ஆந்திரா ஒத்துழைக்கும் என தெரிவித்தார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றது.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-சோ வூய் யீக் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-12, 21-19 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • சீனியர் பிரிவில் 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம்.
    • மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 103 பதக்கங்கள் வென்றுள்ளது.

    ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் 25 மீ சென்டர் ஃபயர் (25m centre fire) பிரிவில் இந்திய வீரர் ராஜ்கன்வார் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றார். அன்குர் மிட்டல் டபுள் ட்ரப் பிரிவில் தங்கம் வென்றார்.

    பெண்களுக்கான டபுள் டிரப் பிரிவில் அனுஷ்கா பாதி (93 புள்ளி) தங்கம், பிரனில் இங்க்லே (89) வெள்ளி, ஹபீஸ் கான்ட்ரக்டர் (87) வெண்கல பதக்கம் வென்றனர். மூன்று பேரும் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.

    சீனியர் பிரிவில் இந்தியா 14 தங்கம், 8 சில்வர், 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.

    ஒட்டுமொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் (சீனியர், ஜூனியர், இளையோர்) மூன்று பிரிவுகளில் 103 பதக்கங்கள் வென்றனர்.

    • வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.
    • இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும்.

    உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய-மாநில அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவது காலத்தின் கட்டாயம்.

    இந்த முயற்சியில் அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் இணைந்து எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.

    1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாகவும், வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    1967-ஆம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான டாக்டர் சி.என். அண்ணாதுரை அவர்கள், "இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

    அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?.

    அதேபோன்று, தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், "மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார் என்றும், 1969-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார்.

    1971-ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

    1974-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது.

    பின்னர், ஒன்றிய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 – 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகியவற்றை அமைத்தது என்றும், இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை.

    இதற்கிடையில், தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் ஒன்றியத்தின் கொள்கைகள், அதிகார சமநிலையை ஒன்றிய அரசுக்குச் சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன.

    ஒன்றிய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள் மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள், ஒன்றிய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன அல்லது ஆணைகளை வெளியிடுகின்றன.

    இன்றைக்கு நாம் ஒன்றிய-மாநில அதிகாரங்களில் உள்ள இந்த முன்னேற்றங்களை தீர்க்கமாக மறுபரிசீலனை செய்து, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவை.

    இந்த நோக்கத்தின் அடிப்படையில், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்டும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு. கே.அசோக் வரதன் ஷெட்டி மற்றும் முன்னாள் திட்டக் குழுத் துணைத் தலைவர் பேராசிரியர் திரு. மு. நாகநாதன் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டும், உயர்நிலைக் குழு ஒன்றினை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

    இக்குழுவின் பணி செம்மையுற அமையும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துக்களைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது.

    கடந்த 23-8-2025 அன்று, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கில், உயர்நிலைக் குழுவின் இணையதளத்தினை தான் தொடங்கி வைத்து, இணையவழி வினாத்தாள் படிவத்தினை வெளியிட்டேன். அதனை https://hlcusr.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

    இந்த விஷயத்தில் மாநில முதல்வர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்தி, உயர்நிலைக் குழுவின் வினாத்தாளினை ஆராய்ந்து, விரிவான பதில்களை வழங்கிட வேண்டுமென்றும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும், நமது நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும் மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் தீவிர பங்கேற்பு மிக முக்கியமானதாக விளங்கும்.

    இந்த முயற்சி அரசியல் மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நிற்பதாகவும், ஒன்றாக, நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணர்வைப் புதுப்பித்து, எதிர்கால சந்ததியினருக்கு வலுவான, ஒன்றுபட்ட மற்றும் உண்மையான கூட்டாட்சி கொண்ட ஒரு ஒன்றியத்தை வழங்குவோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என ஆர்.பி.ஐ. கணித்திருந்தது.
    • விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

    2025-26ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டின் இந்திய உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் என தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஆர்.பி.ஐ. கணித்ததைவிட அதிகமாகும். பண்ணைத்துறை (farm Sector), வர்த்தகம், ஓட்டல், நிதி மற்றம் ரியல் எஸ்டேட் சேவைகள் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக 2024ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் மாத காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 8.4 சதவீதமாக இருந்தது. அதன்பின் ஐந்து காலண்டிற்குப் பிறகு தற்போது 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியா வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

    விவசாயத்துறை 3.7 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.5 சதவீதமாக இருந்தது.

    கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் தொடக்கத்தில் ஆர்.பி.ஐ., 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும், முதல் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 2ஆவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும், 3ஆவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும், 4ஆவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணித்திருந்தது.

    டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பு தற்போது அமலில் உள்ளது. இதன் தாக்கம் 2ஆவது காலாண்டில் பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது.

    • அமெரிக்காவின் துணை அதிபராக டிஜே வான்ஸ் இருந்து வருகிறார்.
    • கடைசி 200 நாட்களில் தலைமை பதவிக்கான பயிற்சிக்கு தயாராகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் ஜே.டி. வான்ஸ், தன்னுடைய தற்போதைய பணி, அமெரிக்காவில் பயங்கரமான சோகம் நடைபெற்றால், தன்னை தலைமை பதவியை ஏற்பதற்கு தயார்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பமுடியாத வகையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்த வான்ஸ், டிரம்ப் தனது பதவிக்காலம் வரை பணியாற்றுவார் எனத் தெரிவித்தள்ளார்.

    USA Today பத்திரிகைக்கு பேட்டியளித்த அவி ஜே.டி. வான்ஸ், டொனால்டு டிரம்பின் உடல் நலம் குறித்து கேள்வியை புறந்தள்ளினார்.

    பயங்கரமான சோகம் நடைபெற்றால், தற்போது கடந்த 200 நாட்களுக்கு மேலான நான் என்ன செய்தனோ, அதைவிட சிறந்த பயிற்சி வேலை இருப்பதாக நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜே.டி. வான்ஸ் இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தானும், தன்னுடைய மனைவி உஷாவும் தற்போதுள்ள வேலையில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஒருவேளை கூடுதல் பதவிக்கான (அமெரிக்க ஜனாதிபதி) கதவு திறக்கப்பட்டார், அப்போது அதுகுறித்து சிந்திப்போம் எனவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.

    79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவ்வப்போது யூகச் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

    • விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் அடுத்ததாக பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பை பிரசன்னா செய்துள்ளார்.

    இந்நிலையில், 'பாம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளது. 

    • தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
    • கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

    கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.

    இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.

    பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.

    பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.

    துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

    ×