செய்திகள்

திமுக கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும்- திருமாவளவன்

Published On 2019-01-23 10:53 GMT   |   Update On 2019-01-23 10:53 GMT
தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சி:

திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.

இதற்கிடையே இன்று காலை மாநாட்டு திடலில் இறுதிகட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சியில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர்கள் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு கம்யூனிஸ்டு செயலாளர்கள் இரா.முத்தரசன், பால கிருஷ்ணன் மற்றும் ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாடு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார தொடக்கமாக அமையும். சனாதனத்தை எதிர்க்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்பது பெருமைக்குரியதாகும். தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொல்.திருமாவளவனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முன்னதாக மாநாட்டு திடலை பார்வையிட வந்த தொல்.திருமாவளவனை கட்சியினர் வரவேற்றனர்.
Tags:    

Similar News