செய்திகள்

அதிமுக- பாஜக இடையே கூட்டணி கிடையாது: தம்பிதுரை

Published On 2019-01-11 04:37 GMT   |   Update On 2019-01-11 04:37 GMT
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே எந்தவித தேர்தல் கூட்டணியும் கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். #ADMK #BJP #Thambidurai
திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள வேடசந்தூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தின் உரிமைகளை பெறுவதற்காக அ.தி.மு.க. தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவையில் குரல் எழுப்பி வருகிறோம். அதன்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்ததால் போராடி வாரியம் அமைத்தோம். மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தொடர்ந்து போராடி கேட்டு வருகிறோம்.

மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகத்துக்கு சாதகமாக பா.ஜ.க. செயல்படுவதால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர் போராட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறோம். எனவே பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே தேர்தல் கூட்டணி என்பது கிடையாது. ஆட்சியில் மட்டுமே தொடர்பு உள்ளது. பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களை ஆதரித்தும், எதிர்த்தும் வருகிறோம்.


மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நான் அ.தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறேன்? என்றும் கூட்டணி குறித்து கருத்து கூற எனக்கு தகுதி இல்லை என்றும் கூறி வருகிறார்.

மேலும் திராவிட கட்சிகளை ஊழல் கட்சிகள் என்றும், எடப்பாடி பழனிசாமியை செயல்படாத முதல்வர் என்றும் கூறிக்கொண்டே இருக்கிறார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள நான் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது.

இதுவரை கூட்டணி குறித்து அ.தி.மு.க. யாரிடமும் பேசவில்லை. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம, துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நல்ல முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #BJP #Thambidurai
Tags:    

Similar News