செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி எரிப்பு

Published On 2018-02-05 08:30 GMT   |   Update On 2018-02-05 08:30 GMT
சிங்காரப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிங்காரப்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோவிந்தாபுரம் அம்பேத்கர் காலனி உள்ளது.

இந்த காலனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு அந்த கொடிகம்பத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை மர்ம நபர்கள் சிலர் கீழே இறக்கி தீவைத்து எரித்து உள்ளனர்.

இன்று காலை அந்த வழியாக வந்த அப்பகுதி மக்கள் கொடி எரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை- பெங்களூரு நெடுஞ்சாலையில் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், எங்களது கட்சி கொடியை எரிந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் நாங்கள் சாலை மறியலை கைவிடுவோம் எனறு கூறினர்.மறியலில் ஈடுபட்ட கட்சியின் நிர்வாகி அன்பரசு என்பவர் திடீரென்று உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொடியை எரித்த மர்ம நபர்களை கைது செய்வோம் என்று போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News