செய்திகள்

அ.தி.மு.க அரசை மத்திய அரசு ஆட்டி படைப்பதாக மக்கள் கருதுகிறார்கள்: வைகோ பேட்டி

Published On 2017-09-11 10:33 GMT   |   Update On 2017-09-11 10:33 GMT
தமிழக அரசை மத்திய அரசு ஆட்டி படைக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் பரவி வருகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

தஞ்சாவூர்:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட இயக்கத்திற்கு சோதனையான கால கட்டத்திலும், தமிழகத்தின் இயற்கை வளத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ள சோதனையான கால கட்டத்திலும் சரித்திர புகழ் பெற்ற தஞ்சையில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா மாநாடு வருகிற 15-ந் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. இதை ஒரு மாநில மாநாட்டை போல் நடத்துகிறோம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகஅரசு அணை கட்டுவதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வராது என்று ஊர், ஊராக சென்று கட்சி வேறுபாடு இன்றி பிரசாரம் மேற்கொண்டேன்.

நீட் தேர்வு சமூக நீதியை சிதைத்து சமாதி கட்டும். ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவில் பிரபலமான டாக்டர்கள் எல்லாம் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் தான். கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சியை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது.

நீட் தேர்வு வேண்டும் என்று சிலர் சொல்வது அவர்களது தனிப்பட்ட கருத்து. நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் வேண்டாம் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லை. வன்முறை இல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி போராட்டம் நடத்தலாம் என்று தான் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் போராட்டத்திற்கே தடை விதித்து இருப்பதைபோல் தமிழகஅரசு கருதி கொண்டு திருச்சியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க ரத்து செய்யப்பட்டுள்ளது என கூறியது தவறானது. ஜனநாயக விரோத நடவடிக்கையாகும்.

கூட்டம் நடத்தினால் எப்படி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் இதை எல்லாம் துச்சமென தூக்கி எறிந்துவிட்டு சகோதரர் மு.க.ஸ்டாலின், பிற கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து பேசி கூட்டத்தை நடத்தியதை வரவேற்கிறேன். போலீசாரை வைத்து எதையும் தடுத்து விடலாம் என தமிழகஅரசு நினைத்தால் அது எதிர்விளைவை ஏற்படுத்தும்.

நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் அவர்களாகவே போராடி வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அடுத்து என்ஜினீயரிங் படிப்பிற்கு நீட் தேர்வு கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். மத்திய அரசு உங்களை (அ.தி.மு.க) ஆட்டி படைக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் பரவி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில துணை பொதுச் செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, மாவட்ட செயலாளர் கோ.உதயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அங்கு நடைபெற்ற மகளிரணி கூட்டத்தில் வைகோ பங்கேற்றார்.

Tags:    

Similar News