செய்திகள்
கொலையுண்ட மாணவர் கார்த்திகேயன் பிணமாக கிடந்த காட்சி.

திருச்சியில் மது போதையில் பிளஸ்-2 மாணவரை குத்தி கொன்ற கல்லூரி மாணவர்

Published On 2017-08-17 10:31 GMT   |   Update On 2017-08-17 10:31 GMT
திருச்சியில் மது போதையில் நடந்த தகராறில் பிளஸ்-2 மாணவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கல்லூரி மாணவரும், அவருடைய தாய்மாமனையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் திருச்சி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் ரெயில்வேயில் வேலை பார்த்து இறந்து விட்டார். இவர்களது மூத்த மகன் கார்த்திகேயன் (வயது 17). பொன்மலை மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கார்த்திகேயனும் பொன்மலை ரெயில்வே காலனி தெற்கு ‘டி’ குடியிருப்பை சேர்ந்த மதீஸ் என்பவரது மகன் ரியாஷ்ராஜூவும்(17) 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்கள் ஆவர். ரியாஷ்ராஜூ தற்போது பாலிடெக்னிக் படித்து வருகிறார்.

கார்த்திகேயனுக்கும், ரியாஷ்ராஜூக்கும் மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. மேலும், பஞ்சர் ஒட்டுவதற்கு பயன்படுத்தப்படும் சொலூசன் எனப்படும் பொருளை போதை பொருளாக பயன்படுத்தும் பழக்கமும் இருந்தது. நேற்று இரவு கார்த்திகேயன் நண்பர் ரியாஷ்ராஜூவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். பிறகு அவரது வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது போதை தலைக்கேறிய கார்த்திகேயன், ரியாஷ்ராஜூவிடம் மேலும் குடிக்க பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த அரிமங்கலம் திடீர் நகரை சேர்ந்த ரியாஷ்ராஜின் தாய் மாமா லெட்சுமணன் (30) மற்றும் அவரது பாட்டி ராணி ஆகியோர் தட்டிக்கேட்டனர். ஆனால் அவர்களிடம் தகராறு செய்த கார்த்திகேயன், போதையில் வீடு அருகிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.

போதையில் கார்த்திகேயன் ரகளை செய்ததால், ரியாஷ்ராஜூம், அவரது பாட்டியும், லெட்சுமணணின் தாயுமான ராணி சத்தம் போட்டுள்ளனர். அப்போது, கார்த்திகேயன் ஆத்திரத்தில் ராணியை தள்ளிவிட்டார். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

தாய் ராணி கீழே தள்ளி விடப்பட்டதை பார்த்த லெட்சுமணன் கோபமடைந்து, வீட்டிற்குள் சென்று காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து, கார்த்திகேயனை சரமாரியாக குத்தினார். அப்போது கார்த்திகேயனை, ரியாஷ் ராஜூ, திமிறாமல் பிடித்துக் கொண்டார். இதனால் கார்த்திகேயன் தப்பி ஓட முடியவில்லை.

மார்பு, வயிற்றில் கத்திக்குத்து காயமடைந்த கார்த்திகேயன் ரத்த வெள்ளத்தில், அதே இடத்தில் பிணமானார். உடனே லெட்சுமணனும் ரியாஷ்ராஜூம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கார்த்திகேயன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் தெற்கு ‘டி’ ரெயில்வே குடியிருப்புக்கு சென்று ரியாஷ்ராஜூவின் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், பொன்மலை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் விரைந்து சென்று குற்றவாளிகளை உடனே கைது செய்வதாக கூறினர். பிறகு தப்பி ஓட முயன்ற லெட்சுமணனையும், கல்லூரி மாணவர் ரியாஸ் ராஜூவையும், கைது செய்தனர். போதையில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News