உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க.வில் `சீட்' கேட்டு பலப்பரீட்சை

Published On 2024-05-06 05:49 GMT   |   Update On 2024-05-06 05:49 GMT
  • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
  • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

சென்னை:

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

Tags:    

Similar News