செய்திகள்

தமிழக அரசை பா.ஜனதா வழிநடத்துகிறது: டி.ராஜா பேட்டி

Published On 2017-06-27 04:45 GMT   |   Update On 2017-06-27 04:45 GMT
தமிழக அரசை பாரதிய ஜனதா வழிநடத்துகிறது என கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.
கும்பகோணம்:

கும்பகோணம் வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

வேளாண்மை இடு பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் விவசாய கடன்களை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு நெருக்கடி நிலை நிலவுகிறது. விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை 2 மடங்காக பெருக்குவோம் என பிரதமர் நரேந்திரமோடி கூறினார். ஆனால் விவசாயிகளுக்காக அவர் எதுவும் செய்யவில்லை.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாயிகளை ஆதரித்து, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் சுவாமிநாதன் குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 24,25,26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளது. மத்திய மந்திரிகளில் சிலர் விவசாய கடன் தள்ளுபடி கேட்பது தற்போது ‘பே‌ஷனாகி’ விட்டது என கூறி வருகிறார்கள். இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் நிலை குலையும் நிலை உருவாகி வருகிறது. தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு உள்பட 17 கட்சிகள் இணைந்து அரசியல் சட்டத்தை காப்பாற்றுவதற்காக மீராகுமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் உருவாகி உள்ளன என்பது பற்றி தெரியவில்லை. அ.தி.மு.க. அணியினர் மீது பா.ஜனதா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தமிழகத்தில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது. மத்திய அரசை எதிர்கொள்ள தற்போதைய அ.தி.மு.க. அரசால் இயலவில்லை. நீட் தேர்வு, மாட்டிறைச்சி விவகாரங்களில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மவுனமாக இருக்கிறார். பயத்தின் காரணமாக அவர் பேச தயங்குகிறார். தமிழகத்தில் உள்ள மாநில அரசை மத்திய அரசு வழிநடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் திருஞானம், மாநில குழு உறுப்பினர் பாரதி, நகர செயலாளர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News