தமிழ்நாடு

வருகிற 13-ந்தேதி முதல் நாகை-இலங்கை காங்கேசன் துறைக்கு "சிவகங்கை" கப்பல் சேவை

Published On 2024-04-28 06:42 GMT   |   Update On 2024-04-28 06:42 GMT
  • மழை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி சேவையானது நிறுத்தப்பட்டது.
  • பொதுமக்கள் கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்த கப்பல் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மூலம் நாகை துறைமுகத்தில் இருந்து 60 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறையை சுமார் 3.30 மணி நேரத்தில் சென்றடையும் வகையில், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த கப்பல் 'செரியாபாணி' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்நிலையில், மழை காரணமாக கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 20-ந்தேதி சேவையானது நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமானில் தயாரிக்கப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக இந்த கப்பல் அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வர உள்ளது. இந்த 'சிவகங்கை' கப்பலின் கீழ்தளத்தில் 133 இருக்கைகளும், மேல்தளத்தில் 25 இருக்கைகளும் உள்ளவாறு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் மக்கள் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ. 5 ஆயிரமும், மேல்தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் மக்கள் பயணிக்க ஜி.எஸ்.டி. வரியுடன் ரூ.7 ஆயிரமும் வசூல் செய்யப்பட உள்ளது. இந்தியர்களுக்கு விசா கிடையாது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ள காரணத்தால், பொதுமக்கள் இந்த கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட் மட்டுமே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News