search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Govt"

    • துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
    • எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் போன்றவை துணை வேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

    இதற்குக் காரணம், ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை, ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை என இரட்டை நிலைப்பாட்டினை தி.மு.க. எடுத்திருப்பதுதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் முரண்பாடுகளில் மொத்த உருவமாக தி.மு.க. விளங்குகிறது. தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு காரணமாக கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

    கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, பல்கலைக்கழக மானியக் குழு விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவது அவசியம். இதனைப் பின்பற்றாமல், துணை வேந்தரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளதன் காரணமாக தலைமையில்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

    எது எப்படியோ, தி.மு.க. அரசின் மோதல் போக்கு, மாணவ, மாணவியரின் கல்வியை கடுமையாக பாதித்துள்ளது.

    தமிழ்நாட்டு மாணவ, மாணவியரின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள நடைமுறைகளின்படி பல்கலைகழகங்களின் துணை வேந்தர் நியமனத்தை மேற்கொள்ள உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.
    • பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    சென்னை :

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாராளுமன்றத் தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் தொடங்கியிருக்கிறது திமுக.

    கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலாரின் ஆன்மீகப் பணிகளுக்காக, பொதுமக்கள் மனமுவந்து தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடைபெறுவதோடு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடம் கண்ணை உறுத்த, சர்வதேச மையம் என்று கூறி ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதை, கடந்த ஜனவர் 26 அன்று, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது சுட்டிக்காட்டி, உண்மையிலேயே திமுக அரசின் நோக்கம் சர்வதேச மையம் அமைப்பதுதான் என்றால், சத்திய ஞானசபைக்குச் சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ, அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டுமே தவிர, மீண்டும் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

    அதன்பிறகு, வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் காரணமாகவும், கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய திமுக, தற்போது காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

    அரசுக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கையில், விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைப்பது, வள்ளலார் அவர்களின் கொள்கைக்கு விரோதமாக, சத்திய ஞான சபைக்குச் சொந்தமான இடத்தில் சர்வதேச மையம் அமைப்பது என, திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

    பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    • ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.
    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.3.2022 அன்று சுப்ரீம் போர்ட்டில் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ந்தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.1.2023-ந்தேதி வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித்தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • வரும் 19-ல் பொதுவிடுமுறையாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் இன்று முதல் தபால் வாக்குகளைப் பெறும் பணிகள் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம் தேதி அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது என தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன.
    • குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்- நீதிமன்றம்.

    பாராளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மாநில உயர்நீதிமன்றங்களை வலியுறுத்தியது.

    அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    தமிழக அரசு அளிக்கப்பட்ட விளக்கத்தில் "தமிழக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளன. 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

    • ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
    • வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    சென்னை:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.

    அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.

    அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • ராஜகண்ணப்பன் கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறையை கவனித்து வருகிறார்.

    சென்னை:

    பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிலையில் மீண்டும் பொன்முடிக்கு அவர் வகித்துவந்த உயர்கல்வித் துறையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்போது அந்த துறை ராஜகண்ணப்பன் வசம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.
    • சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விபரம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியுடன், கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளையும் இணைத்து, மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை நகராட்சியுடன், வேங்கிக்கால், சின்னகாங்கேயனுார், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சி மலை, ஏந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து, மாநகராட்சி ஏற்படுத்தப்பட உள்ளது.

    புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம் பண்ணை, வெள்ளனூர், திருவேங்கைவாசல், வாக வாசல், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    நாமக்கல் நகராட்சியுடன், வகுரம்பட்டி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன் பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து, நாமக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

    • பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பள்ளிகளுக்கு முன் கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. ஏப்ரல் 12-ந்தேதியுடன் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வு முடிவதால் 13-ந்தேதி முதல் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் பஸ் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராகி வருகின்றன. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினமும் 800 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் 1000 பஸ்கள் வீதம் இயக்கப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கோடை விடுமுறை வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தொடங்கும். ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தலால் முன் கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.

    இதன் காரணமாக வெளியூர் செல்லும்போது போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் ஏ.சி. பஸ் பயணம் அதிகரிக்கிறது. தமிழகம் முழுவதும் 364 ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற நாட்களில் அதில் பயணம் செய்வோர் எண்ணிக்கை உயரும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 67 ஸ்பேர் பஸ்கள் உள்ளன. அவற்றையும் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இந்தாண்டு கோடை விடுமுறை 45 நாட்களுக்கும் மேலாக மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் சிறப்பு பஸ்களை இயக்குகிறோம். மேலும் அரசு விரைவு பஸ்களில் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளதால் முன்பதிவு அதிகரித்து வருகிறது.

    முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மாநகர பஸ்சில் செல்வதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையம் செல்வதற்கும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வீடுகளுக்கு செல்ல மாநகர பஸ் வசதியை பயன்படுத்தும் வகையில் ரூ.40 கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
    • ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நாளை தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் ஆர்சிபி- சிஎஸ்கே அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். தொடரின் தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கு தமிழக அரசு சலுகை அறிவித்துள்ளது. அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளை காண வருபவர்கள், ஆன்லைன் டிக்கெட்டை காட்டி மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    மேலும் போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பு, போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் சேப்பாக்கத்தில் இருந்து பிற இடங்களுக்குச் செல்லலாம். இச்சலுகை குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த சீர்மரபினர் வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்க்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் அவர்களும் நன்றி தெரிவித்திருந்தார்

    சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சீர்மரபினர் வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்க்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சீர்மரபினருக்கு DNC & DNTஎன இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக , தமிழகத்தில் DNT என்ற பிரிவின் கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை CPIM சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை அவர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார்.

    இந்நிலையில், 68 சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் .

    இதற்கு முன்னதாக, இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் அவர்களும் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்
    • அன்றைய அ.தி.முக. அரசு DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டது.

    சுதந்திரம் பெறுவதற்கு முன் ஆங்கிலேய ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் (Criminal Tribes Act) பாதிக்கப்பட்ட வகுப்பினர்கள், சீர்மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டனர். சீர்மரபினர் வகுப்பினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்க்கப்பட்டு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு 68 வகுப்பினர்கள் சீர்மரபினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities / Denotified Tribes என இரண்டு சான்றிதழ்களுக்குப் பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. அன்றைய அ.தி.முக. அரசு DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டது.

    ஆனால் மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும், தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.

    அதே சமயம் இந்த இரு முரண்பாடுகளானவற்றையும் களைய வேண்டும் என்று நான் சட்டமன்றத்தில் அன்றே கோரிக்கை விடுத்தேன். தற்போது சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள முதல்வர் அவர்களுக்கு நன்றி" என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    ×