search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thanjavur"

    • நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில்.
    • நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார்.

    கோவில் தோற்றம்

    பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஆனால் தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கலியுக வெங்கடேசப் பெருமாள் கோவிலில், நித்திய சொர்க்க வாசல் அமைந்துள்ளது. இங்கு பெருமாளை தரிசனம் செய்யும் பக்தா்கள், பின்னர் சொக்கவாசலைப் பயன்படுத்தி வெளியே வருவதை தினமும் செய்கிறார்கள். எனவே இத்தலம் நித்திய சொர்க்க வாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

    தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வெங்கடேசப் பெருமாள், `தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசலைப்போல நுழைவுவாசல் வைத்து ஒரு கோவில் கட்டு' என பணித்தார். மேலும் அவர் கூறுகையில், `இத்தலத்தில் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக கலியுக வெங்கடேசப் பெருமாளாகவும், மகாலட்சுமி சமேதராக சதுர்புஜ வரதராஜப் பெருமாளாகவும் இரு கோலத்தில் எழுந்தருளி காட்சி தருவேன்.

    இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்ய சொர்க்க வாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு, திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்றால் கிடைக்கும் பலனையும், வைகுண்ட பதவியையும் தந்தருள்வேன்' என்று கூறி மறைந்தாராம்.

    அதன்படி தஞ்சையை கைப்பற்றிய மராட்டிய மன்னர்கள், மராட்டிய சிற்பக்கலைகளின் கருவூலமாக திகழும் வகையில் இக்கோவிலை கட்டினார்கள். இத்தலத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் புரட்டாசி சனிக்கிழமைதோறும் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம்.

    தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். இதன் காரணமாக இக்கோவில் 'நித்திய சொர்க்கவாசல் கோவில்' என அழைக்கப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள், இத்தலத்தில் ஆண்டு முழுவதும் நித்ய சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வரலாம்.

    இந்த கோவிலில், நவக்கிரகங்களுக்கு நடுவில் சூரியனுக்கு பதிலாக சந்திரன் இருக்கிறார். இதன் மேல் தளத்தில் கல்லினால் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த சன்னிதிக்கு தனி விமானமும், கலசமும் உள்ளது. இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்தால் ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் புரட்டாசி சனிக்கிழமைகளில் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    வைணவத் திருக்கோவிலான இந்த ஆலயத்தில், சிவாலயங்களில் காணப்படும் கணபதி, கொற்றவை, பிச்சாடனர், நடராஜர் ஆகிய தெய்வங்கள் கருவறை கோஷ்டத்தில் இடம் பெற்று உள்ளன. மேலும் சிவாலயங்களில் சிவனுக்குரிய வில்வ மரம் இந்த கோவிலில் மகாலட்சுமி அம்சமாகவும், தல விருட்சமாக இருப்பது அபூர்வமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில் அமைந்துள்ளது.
    • 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாகும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் அமைந்துள்ளது, திருநறையூர் நம்பி கோவில். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

    தல வரலாறு

    அனைத்தையும் துறந்து இறைவன்பால் நாட்டம் கொள்ள வேண்டியவர்கள், முனிவர்கள். ஆனால் மேதாவி மகரிஷி என்பவர், மகாவிஷ்ணுவே தனக்கு மருமகனாக வரவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் ஆகாமல், பெண் பிள்ளை இல்லாமல் எப்படி இந்த வேண்டுதல் நிறைவேறும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாது அனுதினமும், தான் வழிபடும் திருநறையூர் வைணவ ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சக்கரத்தாழ்வார் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்யலானார்.

    முனிவரின் ஆசையை நிறைவேற்ற விருப்பம்கொண்ட பரந்தாமன், மகாலட்சுமியைப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்த மகாலட்சுமி, மேதாவி முனிவர் தவம்செய்த வகுள(மகிழ) மரத்தடியில், ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத்தில் குழந்தையாக அவதரித்தார். யாருமற்ற அந்தக் குழந்தையை தன் மகளாக நினைத்து வளர்த்தார் முனிவர். வஞ்சுளவல்லி என்னும் திருநாமம் சூட்டப்பட்ட அந்த பெண் பிள்ளை, முனிவரது குடிலில் அவரோடு இணைந்து திருமாலை வணங்கி வந்தது.

    தேவியை பிரிந்து வாழ்ந்த விஷ்ணு சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தேவியை மணம்புரிய விரும்பி, தேவி இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு கருடனிடம் பணித்தார். அதன் படியே மகாலட்சுமி தேவியை தேடி புறப்பட்டார், கருடன். பல ஊர்களைச்சுற்றி காணக்கிடைக்காத நிலையில் மேதாவி முனிவர் வசித்த திருநறையூர் தலத்திற்கு வந்துசேர்ந்தார்.

    திருநரையூரை சுற்றி வட்டமடித்த கருடாழ்வார் சோர்ந்து போய், முனிவர் வசித்த குடிலின் மீது அமர்ந்தார். அப்போது குடிலை விட்டு வெளியே வந்த மேதாவி முனிவரின் மகள்தான், தான் தேடி வந்த மகாலட்சுமி என்பதை கருடன் அறிந்து கொண்டார். பின்னர் நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, லட்சுமி தேவி இருக்கும் இடத்தை கூறினார்.

    முனிவரிடமும், தேவியிடமும் திருவிளையாடல் நடத்த விரும்பிய மகாவிஷ்ணு, மானுட வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தார். அங்கே தனியாக இருந்த வஞ்சுளவல்லியிடம் தாகம் தீர்க்க தண்ணீர் தருமாறு கேட்டார். தண்ணீருடன் வந்த தேவியின் கரம் பற்றினார்.

    அந்த சமயம் அங்கே வந்த முனிவர் இந்த காட்சியைப் பார்த்து வெகுண்டெழுந்தார். அப்போது பெருமாள் தன்னுடைய இரு தோள்களிலும் சங்கு, சக்கர அடையாளத்தைக் காட்டி தான் யாரென்று முனிவருக்கு உணர்த்தினார்.

    வந்திருப்பது தான் தினமும் வழிபடும் பரந்தாமன் என்பதையும், இதுவரை தன்னிடம் வளர்ந்தவர் மகாலட்சுமி என்பதையும், தனக்கு அருள் செய்யவே இறைவன் இவ்வளவு பெரிய நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்பதையும், மேதாவி முனிவர் புரிந்து கொண்டார்.

    மகாவிஷ்ணுவை வணங்கினார். அப்போது மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை மணம் முடித்து தருமாறு கேட்க, அதற்கு ஒரு தந்தையாகவும், பக்தனாகவும் சில நிபந்தனைகளை இறைவன் முன் வைத்தார், மேதாவி முனிவர்.

    `வஞ்சுளவல்லியை திருமணம் முடித்து வைகுண்டம் அழைத்துச் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருள்பாலிக்கவேண்டும். தனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியை முன்னிலைப் படுத்தியே அனைத்து உற்சவங்களும், பூஜைகளும் நடக்கவேண்டும்' என்று மேதாவி முனிவர் வைத்த வேண்டுகோள் அனைத்தையும் பெருமாள் ஏற்றுக்கொண்டார்.

    அடுத்து தனிஒருவராய் வந்து பெண் கேட்பதை ஊரார் ஏற்கமாட்டார்கள், பந்துமித்திரர்களுடன் வரவேண்டும் என்ற நடைமுறையை லேசான தயக்கத்துடன் கூற, அதை புரிந்துக்கொண்ட பெருமாள் தன் முன்னோர்களான ப்ரித்யுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்) ஆகியோரின் திருவுருவங்களையும் தானே எடுத்து வந்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். பின்னர் பிரம்மனை அழைத்து திருமணம் செய்யப்பட்டது.

    முனிவரின் கோரிக்கைக்கு பெருமாள் செவிசாய்த்ததின் காரணமாக, இத்தலத்தில் தேவிக்கே அனைத்திலும் முன்னுரிமை தரப்படுகின்றது. வீட்டுப் பெண்களை 'நாச்சியார்' என்று செல்லமாக அழைப்பது தஞ்சை மாவட்டத்தின் மரபுகளில் ஒன்றாகும். அதன் அடிப்படையில் இக்கோவில் 'நாச்சியார்கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    ஆலய வாசலிலும், கருவறைக்கு அருகிலும் நின்றுபார்த்தால் தேவியே அனைவருக்கும் காட்சிதருகிறார். அனைத்தையும் தானே நிர்வாகம் செய்வதை உணர்த்துவதுபோல இடுப்பில் சாவிக்கொத்துடன் நின்றகோலத்தில் இருக்கும் தாயாரை, தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். பெருமாள் சற்று வடக்காக தள்ளிநின்று மறைவாக காட்சியளிக்கிறார். திருமணக்கோலத்திலேயே இருவரும் காட்சியளிப்பதால் திருமணத்திற்கு வந்ததாகக் கூறப்படும்

    ப்ரிதியுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்), திருமணம் செய்துவைத்த பிரம்மன் ஆகியோரும் கருவறையில் இருந்தவாறே காட்சி அளிக்கின்றனர்.

    மூலவர் சன்னிதியின் விமானம், ராஜகோபுரத்தை நினைவூட்டுகிறது. இதை `ஹேம விமானம்' என்கின்றனர். ஆழ்வார்களால் பெருமாளும், நாச்சியாரும் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி 'திருநரையூர் நம்பி-வஞ்சுளவல்லி' என்னும் திருநாமம் கொண்டும், உற்சவர் 'இடர்காத்தவரதன்' என்னும் திருநாமம் கொண்டும் அருள்பாலிக்கின்றனர். இத்தல இறைவன் ஸ்ரீனிவாசன் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார். கல் கருடன் இவர்களுக்கு முன்னால் தனிச் சன்னிதியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    இவரது சன்னிதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விஷேச திருமஞ்சனங்கள் நடக்கிறது.

    பிரகார சுற்றில் பரிவார தேவதைகளாக இடச்சுற்றில் சக்கரத்தாழ்வாரும், ஆஞ்சநேயரும், அஷ்டபெருமாள்களும் (எட்டு பெருமாள்கள்), வலதுசுற்றில் லட்சுமிநரசிம்மரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர்.

    பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள், மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க, அதன் நடுவே மேதாவி முனிவர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். கருடனால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இரண்டு நிஜக் கருடன்கள், உச்சிக்கால பூஜைநேரத்தில் வந்து நைவேத்திய பொருட்களை உண்டு வந்துள்ளன. அவைகளின் மறைவிற்குப் பின் பிரகாரத்தில் அதற்கென தனி சன்னிதி அமைத்துள்ளனர்.

    இங்கு மோட்சதீபம் ஏற்றி வழிபடுவது நடைமுறையாக உள்ளது. கோவிலின் வடபுறத்தில் தலதீர்த்தமான மணிமுத்தா தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் ஆகும்.

    இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாக வைகாசி வசந்த உற்சவம், ஆவணி திருக்கல்யாணம், மார்கழி பிரம்மோற்சவம், பங்குனி தேரோட்டம் ஆகியவற்றை கூறலாம். இவைகளில் வருடத்தின் பின்பகுதியில் வரும் இரு உற்சவங்களும் மிகவும் பிரபலமானதாகும்.

    இந்த சமயத்தில் நடைபெறும் வீதி உலாவின்போது தாயார் அம்ச வாகனத்தில் முன்னே செல்ல, பெருமாள் கருட வாகனத்தில் பின்னே செல்கிறார். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    கவலை தீர்க்கும் கல் கருடன்

    இவ்வாலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடதுபுறம் இருந்து அருள்பாலிக்கிறார், கல் கருடன். பெருமாளுக்கும், தாயாருக்கும் நடப்பதுபோலவே தினசரி ஆறுகால பூஜை இந்த கல் கருடனுக்கும் நடைபெறுகிறது. பெரும்பாலான வைணவ தலங்களில் கருட பகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதைச் சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.

    கல் சிற்பமாக இருந்தால் சிறிய அளவில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்தக் கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலையே உற்சவ காலத்தில் வீதிஉலா கொண்டு வரப்படுவதும் எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

    கர்ப்ப கிரகத்தில் இருந்து நான்கு பேர், பின்னர் எட்டு பேர், அடுத்து பதினாறு பேர், முப்பத்திரண்டு பேர், கடைசியாக அறுபத்து நான்கு பேர் என படிப்படியாக ஆட்கள் கூடி கல் கருடனை தேரடி வரை சுமந்துவந்து, அவர்மீது பெருமாளை ஏற்றிவைக்கின்றனர். பெருமாளை சுமந்து செல்லும் சந்தோஷத்திலும், புளகாங்கிதத்திலும், கசிந்துருகும் கல் கருடனின் மேனி வியர்ப்பது, புராணகாலத்தில் இருந்து இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கும் செய்தியாகும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோவில் உள்ளது.

    • காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழாவில் தமிழகம் மற்றும் பல்வேறு வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அவர்களின் வசதிக்காக கூடுதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் சில ரெயில்க ளின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு ள்ளன.

    அவற்றின் விவரம் வருமாறு :-

    காரைக்கால்- தஞ்சாவூர் டெமு ரெயில் (06835) இன்று முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை திருச்சி ஜங்ஷன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி - வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06866) திருச்சி ஜங்ஷனில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    வேளாங்கண்ணி- தஞ்சாவூர் முன்பதிவில்லா டெமு ரயில் (06863)வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.35 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    விழுப்புரம்- நாகப்பட்டினம்- விழுப்புரம் முன்பதிவில்லா டெமு ரயில் (06865/ 06864) இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை, செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரு வழித்தடத்திலும் இயக்கப்பட உள்ளன.

    அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 12.50 மணிக்கு நாகப்பட்டினம் சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் நாகப்பட்டி னத்தில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

    நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி முன்பதிவில்லா டெமு ரெயில் (06857/ 06858) (06868/ 06867) நாளை முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

    இதில், வேளாங்கண்ணி-நாகப்பட்டினம் (06858) ரெயில் வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினத்தை பிற்பகல் 12.55 மணிக்கு சென்றடையும்.

    மறு வழித்தடத்தில் நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி (06857) ரயில், நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    இதேபோல, வேளாங்கண்ணி- நாகப்பட்டினம் (06868) ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு, நாகப்பட்டினத்துக்கு பிற்பகல் 2.20 மணிக்கும், நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரெயில் (06867) நாகப்பட்டினத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு, வேளாங்கண்ணிக்கு பிற்பகல் 3.50 மணிக்கும் சென்றடையும்.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
    • மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்தனர்.

    தஞ்சாவூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அம்மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் வரவேற்றார் . இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மகேஷ் கிருஷ்ணசாமி, செல்வம், மாநகர செயலாளரும் மேயருமான சண் .ராமநாதன் , மாவட்ட அவை தலைவர் இறைவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தவறிய மத்திய அரசை கண்டித்து பேசினார். மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்தனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, இலக்கிய அணி அமைப்பாளர் வரகூர் காமராஜ், முன்னாள் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலாரவி, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஒன்றிய குழு உறுப்பினர் உஷாராணி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.
    • இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து ஹூப்ளிக்கும் சேலம், திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் சேவை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. தற்போது

    மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஹுப்ளியில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும் ஹூப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் (07325) அடுத்த மாதம் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மறு மார்க்கமாக தஞ்சாவூரில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும் தஞ்சாவூர் - ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் ( 07326) அடுத்த மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சையில் இருந்து மன்னார்குடி வரை மாநில நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இன்னும் நடக்க இருக்கின்ற பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இருந்து மன்னார்குடி வரை மாநில நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சை அடுத்த காட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்தப் சாலை பணிகளை மாநில நெடுஞ்சா லைத்துறை தலைமைப் பொறியாளர் செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நடந்து முடிந்த பணிகள் குறித்தும் இன்னும் நடக்க இருக்கின்ற பணிகள் குறித்தும் அதிகா ரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவி கோட்டப் பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் வடிவ ழகன் மற்றும் ஒப்பந்தக்காரர் உடன் இருந்தனர்.

    • நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

    மொத்தம் 16 பெட்டிகளுடன் ஓடும் இந்த ரெயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    பாபநாசம்:

    தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.

    கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

    மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.

    மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.

    தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.

    இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.

    தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபக ரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவ ட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.

    இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
    • வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

    இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த ஆண்களும், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்களும் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

    இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை ( வெள்ளிக்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வழங்கப்படும்.

    ஊர்க்காவல் படையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் இருப்பிட முகவரிக்கான ஆதார் அட்டையின் நகல்கள் ஆகியவற்றுடன் இணைத்து வரும் 17.10.2022 அன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வில் கலந்த கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் கல்விச்சான்றிதழ்கள் மற்றும் அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

    வயது வரம்பு 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 157 செ.மீயாக இருக்க வேண்டும்.

    ஆண்கள் மார்பளவு 81-86 செ.மீ ஆக இருக்க வேண்டும்.

    ஆண்/பெண் -100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் நடத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது
    தஞ்சாவூர்,மே.29-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக 2021-2022ம் ஆண்டிற்கு வளைகோல்–பந்து லீக் விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவில் ஜூன் 2022ம் மாதத்தில்  நடைபெற இருப்பதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 1.6.22 அன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான வளைகோல்பந்து விளையாட்டு போட்டியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, ஹாக்கி கழக மற்றும் கிளப் அணிகளில் உள்ள ஆண்கள் அணி மட்டுமே கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     வளைகோல்பந்து லீக் போட்டிகள் 1.6.22 அன்று காலை 9 மணிக்கு துவங்கும். வளைகோல்பந்து லீக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள அணிகள் தங்கள் அணியினை தஞ்சாவூர் மாவட்டப் பிரிவு வளைகோல்பந்து பயிற்றுனர் கைப்பேசி எண்.9865662797 மற்றும் அலுவலக தொலைபேசி எண்.04362-235633-ல் தொடர்பு கொண்டு 31.5.22ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும்.

    முதல் இடத்தில் வெற்றி பெறும் ஹாக்கி அணி மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.  மேலும், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் அணியி–னருக்கு பயணப்படியோ, தினப்படியோ தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படமாட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தஞ்சை அருகே மின் மோட்டார் மூலம் குறுவை நடவு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் பாடல்கள் பாடி பெண்கள் நாற்று நட்டனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை  மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

    குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பு அதிகரிக்கும். 

    தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்த நிலையில் இந்த ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு முதல் முறையாக முன்கூட்டியே மேட்டூர் அணை இந்த மாதம் 24-ம் தேதி திறக்கப்பட்டது.

    மேட்டூர் அணையில் இருந்து  தண்ணீர்  27-ந் தேதி தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்து.  பின்னர் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 3  லட்சம் ஏக்கருக்கு  மேல் குறுவை சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.இதற்கிடையில் தூர்வாரும் பணி நடந்து வருவதாலும், பாலப் பணிகள் நடைபெறுவதாலும்க ல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கல்லணை கால்வாய் நம்பியுள்ள விவசாயிகள் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.  

    இருந்த போதிலும் தற்போது தஞ்சாவூர் அருகே வெண்ணாறு ஆற்று பாசன பகுதிகளான உதராமங்களம் , குருங்களூர், திட்டை, கூடலூர், மணக்கரம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சி குறுவை நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
     
    நிலத்தில் டிராக்டர் வைத்து உழுது பெண்கள் பாடல்கள் பாடி நடவு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.  தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்,  விதை  உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×