தமிழ்நாடு

பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு

Published On 2024-04-28 07:35 GMT   |   Update On 2024-04-28 07:35 GMT
  • கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.
  • அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

அதேநேரம் அணைக்கு வரும் நீர் வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45.60 அடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83 அடியாக இருந்தது. தற்போது அதற்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

தற்போது நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் பாசனம், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனம் ஆகியவற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு தற்போது 200 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பவானிசாகர் அணையில் இன்னும் 10 அடி நீர் குறைந்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டு விடும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News