செய்திகள்

கூட்டணி அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை: குமாரசாமி

Published On 2019-02-05 02:18 GMT   |   Update On 2019-02-05 02:18 GMT
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளதால், எனது தலைமையிலான கூட்டணி அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Congress
பெங்களூரு :

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எனது கூட்டணி அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை. எனது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு பாராளுமன்ற தேர்தல் வரை மட்டுமல்ல, தனது 5 ஆண்டுகள் ஆட்சி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.

சில ஊடகங்கள், அரசின் நிலையற்ற தன்மையில் இருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றன. காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியிடப்படுகின்றன. நான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் இன்று கூட பேசினேன். சட்டசபை கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த கூட்டணி அரசு தனது ஆட்சி காலத்தை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன். இந்த அரசுக்கு காலக்கெடு குறித்து வருகிறார்கள். பிரச்சினைகளை எவ்வாறு சரிசெய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

எனது கூட்டணி அரசுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதை பாதுகாக்க பா.ஜனதாவில் எனக்கு ஆதரவு உள்ளது. எனது செயல்பாட்டில் காங்கிரசின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். கூட்டணி அரசு நீடிக்காது என்று தவறான தகவல்களை சிலர் வேண்டுமென்றே பரப்புகிறார்கள்.

கூட்டணி அரசு என்றாலே சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நான் செய்கிறேன். சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை கையாளுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

முதல்-மந்திரி பதவி காலி இல்லை என்று சித்தராமையாவே கூறி இருக்கிறார். பெரும்பான்மை எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இருந்தால், யார் வேண்டுமானாலும் முதல்-மந்திரியாக முடியும். இதுபற்றி நான் எதற்காக கவலைப்பட வேண்டும்.

சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்று அவருடைய ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து தேவேகவுடா பேசுவார்.

நிதி ஆதாரங்களை திரட்டுவதில் பிரச்சினை உள்ளது. அதனால் கர்நாடகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமில்லை. ஆனால் பெண்கள், மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறார்கள். குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தாலும், மதுபானம் தாராளமாக கிடைக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து ஆழமாக ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #Congress
Tags:    

Similar News