தமிழ்நாடு

3 பேரின் உயிரை பலி வாங்கிய குவாரி வெடிவிபத்துக்கு காரணம் என்ன? முதல் தகவல் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Published On 2024-05-02 10:01 GMT   |   Update On 2024-05-02 10:01 GMT
  • குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன.
  • புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

காரியாபட்டி:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிலிக்குண்டு கிராமத்தில் ஆர்.எஸ்.ஆர்.கிரஷர் என்ற பெயரில் கல் குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் அங்குள்ள வெடிமருந்து சேமித்து வைக்கும் குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். அவர்களது உடல் பாகங்கள் 1 கி.மீ. தூரம் வரை வீசப்பட்டு கிடந்தது. இந்த விபத்து தொடர்பாக கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆவியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில் வெளியாகி உள்ள தகவல்கள் வருமாறு:-

நானும் (கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ்), கிராம உதவியாளர் மஜீத்கனியும் அலுவலகத்தில் பணியில் இருந்தபோது டமார் என்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே நாங்கள் இருவரும் குவாரி பக்கம் சென்று பார்த்தபோது, கிரஷருக்கு தெற்கு பக்கம் உள்ள வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து ஏற்பட்டு குடோன் தரைமட்டமாகி கிடந்தது. குடோனுக்கு பக்கத்தில் நின்றிருந்த வெடி மருந்து ஏற்றப்பட்ட இரண்டு வேன்களும் சேதமடைந்து கிடந்தன. அதன் பாகங்கள் நாலாபக்கமும் சிதறிக்கிடந்தன.

வெடிச்சத்தம் கேட்டு வந்த கடம்பன்குளத்தை சேர்ந்த வேட்டையன் மற்றும் கிரஷரில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்த கீழஉப்பிலிக்குண்டு குருநாதனிடம் விசாரித்த போது, கள்ளிக்குடி தாலுகா டி.புதுப்பட்டி அழகர்சாமி மகன் கந்தசாமி, தென்காசி மாவட்டம் செந்தட்டியாபுரம் அருகன்குளம் குருசாமி ஆகியோர் குடோனில் இருந்த வெடிமருந்துகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு உடல் பாகங்கள் நாலாபுறமும் சிதறி இறந்துவிட்டதாக சொன்னார்.

மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்திருந்தும் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல் உயர்ரக வெடிமருந்துகள் இறக்கும் இடத்தில் போதிய கண்காணிப்பு செய்யும் அலுவலர் இல்லாமலும் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும், நைட்ரோ மிக்சர் (நைட்ரஜன்) வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து லோடு இறக்கினாலோ, ஏற்றினாலோ வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் இறக்கியுள்ளனர்.

வெடி மருந்துகளை போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனில் வேலை செய்ததால் வெடிவிபத்து ஏற்பட்டு அதன் காரணமாக இருந்த மேற்படி வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகிக்காத அதன் உரிமையாளர் ராஜ்குமார், மேற்பார்வை செய்து வந்த உரிமையாளர்களான ராம்ஜி, மேற்பார்வையாளர் ராம மூர்த்தி ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் 286 (மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல், அலட்சியமாக இருத்தல்), 304(2) மற்றும் 9 (பி)(1)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் ஜாமினில் வெளிவரமுடியாத வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதில் தலைமறைவாக இருக்கும் ராஜ்குமார், ராம்ஜி, ராமமூர்த்தி ஆகியோர் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விபத்து நடந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்ட 1,200 கிலோ வெடிபொருட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் அதன் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News