தமிழ்நாடு செய்திகள்

விஜய் மேடை ஏறலாம், கூட்டத்தை கூட்டிக்காட்டலாம், ஆனால்... வானதி சீனிவாசன் உறுதி

Published On 2026-02-24 09:40 IST   |   Update On 2026-02-24 09:40:00 IST
  • இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
  • ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

கோவையில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கூட மாநில அரசு அந்த உத்தரவை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அதை தடுத்து நிறுத்தினார்கள்.

சட்டம் ஒழுங்கு என்ற ஒரு பொய் காரணத்தை சொல்லி தீபத் திருநாள் அன்று தீபம் ஏற்றுவதை தடுத்தது இந்த தி.மு.க. அரசு.

தமிழகம் எப்போதும் தெய்வீக மண். இங்கு இருக்கக்கூடிய கோவில்கள், இறை தெய்வங்கள், கோவிலையொட்டி இருக்கக்கூடிய கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தான் தமிழர்களுடைய அடையாளம்.

தமிழ்நாடு என்றாலே ஒரு கோபுர சின்னத்தை வைத்தது நம் முன்னோர்கள். கோபுர சின்னம் கோவிலின் அடையாளம் என்பதை தாண்டி அது தமிழகத்தின் அடையாளமாகவே இருந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற விதமாக திராவிட மாடல் தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் திருப்பரங்குன்றத்தில நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு காரணம். நீதிமன்றத்தில் போய் வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்டது தி.மு.க. அரசு. அவர்களுடைய நோக்கம் என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும். இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.

ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

ஊழல்வாதிகளை மிரட்டி தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளாரே?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை மாதம் ஆகிறது. அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா?

அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் குற்றச்சாட்டிற்காக ஒரு சிட்டிங் அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.

தி.மு.க. கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் கூறியிருக்கிறாரே?

விஜய் எந்தவிதமாக புதுபுது வார்த்தைகள் வைத்து பேசினாலும் அல்ட்டிமேட்டா தி.மு.க.வை வீழ்த்தப்போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான். அதனால் மேடை ஏறலாம். வசனம் பேசலாம். கூட்டத்தை கூட கூட்டிக்காட்டலாம். ஆனால் வாக்குகள் விழுவது என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். ஏனென்றால் அவர்களை வீழ்த்த முடிகின்ற சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News