12 பேர் சிறைபிடிப்பு எதிரொலி - பாம்பன் மீனவர்கள் திடீர் வேலைநிறுத்தம்
- இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது.
- மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று அதிகாலை தெற்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி டேவிட் என்பவரின் படகில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படை எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்திருப்பது மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 21-ந் தேதி மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று பாம்பன் மீனவர்கள் கைதை கண்டித்து இன்று பாம்பனில் மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பாம்பன் துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் 100-க்கும் மேற்பட்ட விசை படகுகள் கடலுக்குள் செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. திடீர் வேலைநிறுத்தம் காரணமாக பாம்பனில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் கைது செய்யும் படலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது. இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய அரசு இந்த விவகாரத்தை உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.