தமிழ்நாடு

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை: கூவம் ஆற்றில் 17 தூண்கள் அகற்ற முடிவு

Published On 2024-05-02 10:42 GMT   |   Update On 2024-05-02 10:42 GMT
  • டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
  • மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை:

சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை (20.6 கி.மீ.) திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு சிக்கல்களால் அந்த பணி முடங்கியது.

இதைத் தொடர்ந்து தற்போது சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம். இரண்டு அடுக்கு மேம்பாலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.5 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் இது அமைய உள்ளது. இதற்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் 2 அடுக்கு மேம்பால திட்டத்தில் துறைமுகம்- மதுரவாயல் வழித்தடத்தில் ஏற்கனவே கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட தூண்களை இடித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

எழும்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் மொத்தம் 17 தூண்கள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. இந்த தூண்கள் முழுவதும் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த தூண்கள் கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டது குறித்து சிக்கல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கட்டப்படும் சென்னை துறைமுகம்- மதுர வாயல் 2 அடுக்கு பறக்கும் சாலை திட்டத்தில் மொத்தம் 605 தூண்கள் மற்றும் 13 சரிவுப் பாதைகள் வர உள்ளன. மேம்பால பணிக்கு தூண்கள் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஒப்பந்ததாரர்கள் தொடங்கி உள்ளனர்.

சில இடங்களில் மண் பரிசோதனையும் முடிந்து உள்ளது. மதுரவாயலில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் 2 அடுக்கு பறக்கும் மேம்பாலத் திட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது எழும்பூர், ஆயிரம் விளக்கு பகுதியில் கூவம் ஆற்று கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள 17 தூண்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேம்பால பணியின் இறுதியில் துறைமுகத்துடன் 120 மீட்டர் தூரத்திற்கான இணைப்பு பகுதியில் நிலம் தேவைப்படுகிறது. இழப்பீடு வழங்குவது மூலம் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் நீங்கி உள்ளன. அரும்பாக்கத்தில் 4ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ரூ.91 கோடி இழப்பீடு தொகையாக மாநில அரசு வழங்குகிறது.

துறைமுகத்தில் கடற்படையின் இடத்தில் உள்ள 64 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. நந்தனத்தில் புதிய வீடுகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும். இதன் பின்னர் கடற்படை இடத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News