செய்திகள்

ராகுலை கிண்டல் செய்யும் விளம்பரத்துக்கு தடை: தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை

Published On 2017-11-15 05:18 GMT   |   Update On 2017-11-15 05:18 GMT
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்யும் விளம்பரத்துக்கு தேர்தல் கமி‌ஷன் தடை விதித்துள்ளது.
அகமதாபாத்:

குஜராத் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜனதா சார்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான விளம்பர குறும்படம் ஒன்றும், வானொலியில் ஒலிபரப்புவதற்கான ஆடியோவும் தயாரிக்கப்பட்டது.

இவற்றை ஒளி-ஒலி பரப்புவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி அனுமதி கோரி இருக்கிறது. அதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ‘பப்பு’ (சிறுவன்) என பொருள்படும்படி மறைமுகமாக தாக்கி கிண்டல் செய்யப்பட்டு இருந்தது.

ராகுல் காந்தியை பா.ஜனதாவினர் கேலி செய்யும் போது அவரது பெயரை குறிப்பிடாமல் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம். சமூக வலைதளங்களிலும் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தியை கேலி கிண்டல் செய்து வந்தனர்.


தற்போது தேர்தல் பிரசார சி.டி.யில் ‘பப்பு’ என்ற வார்த்தை இடம்பெற்று இருந்தது. அந்த வார்த்தை மரியாதைக் குறைவாக உள்ளது என்று கூறி தேர்தல் கமி‌ஷன் ஊடகப்பிரிவு அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

இதுபற்றி பா.ஜனதா சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் யாரையும் குறிப்பிட்டு ‘பப்பு’ என்ற வார்த்தையை பா.ஜனதா பயன்படுத்தவில்லை. தேர்தல் கமி‌ஷன் அந்த வார்த்தைக்கு தடைவிதித்துள்ளதால் வேறு வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்தி மீண்டும் அனுமதிகோருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News