தமிழ்நாடு

தாளவாடி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை

Published On 2024-05-02 04:14 GMT   |   Update On 2024-05-02 04:14 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
  • மாவட்டத்தில் ஒருபுறம் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது மற்றொரு புறத்தில் மழை பெய்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் காய்ந்து கிடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தாளவாடி அடுத்த எரகனள்ளி, நெய்தாலபுரம், கல்மண்டிபுரம், ஜீர்கள்ளி ஆகிய கிராமத்தில் சூறாவளி காற்றுடன் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இந்த சூறைக்காற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல கல்மண்புரம் கிராமத்தில் 2 தென்னை மரங்களும் காற்றில் முறிந்து விழுந்தது. அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விவசாயி கவலை அடைந்துள்ளார். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 110.48 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புழுக்கத்தால் அவதி அடைந்து இரவில் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் ஒருபுறம் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்போது மற்றொரு புறத்தில் மழை பெய்து வருவது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

Tags:    

Similar News