செய்திகள்

அன்னிய செலாவணி வழக்கு: டெல்லி சி.பி.ஐ. முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர்

Published On 2017-08-23 07:36 GMT   |   Update On 2017-08-23 07:36 GMT
அன்னிய செலாவணி வழக்கில் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் இன்று காலை கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜர் ஆனார்.

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவர் ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமம் மொரீசியஸ் நாட்டில் இருந்து நிதி திரட்ட நிதி அமைச்சகத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து அனுமதியை பெற்று தந்ததாகவும், இதற்காக கார்த்தி சிதம்பரம் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

அதை தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையில் ஆஜராகும்படி கார்த்தி சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் தடுக்க அவர் உள்பட மேலும் 4 பேரையும் தேடப்படும் நபர்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அதை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது. அதை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஐகோர்ட்டின் இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு தடை இல்லை என்றும் உத்தரவிட்டனர். மேலும் சி.பி.ஐ. முன்பு கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அதை தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜர் ஆனார். அவருடன் வக்கீலும் உடன் இருந்தார். விசாரணையின் போது அவர் உடன் இருக்க கூடாது. எனவே அவர் ஒரு தனி அறையில் இருந்தார். விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்துக்கு தேவைப்படும் போது நேரில் சென்று உதவி செய்தார்.

கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் இன்று சரமாரியாக கேள்விகள் கேட்டனர். அதற்காக ஏராளமான கேள்விகள் தயாரித்து வைத்துள்ளனர். விசாரணை இன்று மாலை வரை நடக்கிறது.

Tags:    

Similar News