இந்தியா

கேரளாவில் கனமழை நீடிப்பு- கொச்சி, திருச்சூரில் சாலைகளை சூழ்ந்த வெள்ளம்

Published On 2024-05-23 04:42 GMT   |   Update On 2024-05-23 04:42 GMT
  • கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.
  • கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

புயல் சுழற்சி மற்றும் வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று கொச்சி மற்றும் திருச்சூரில் பல மணி நேரம் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக பிரதான சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின.


கோழிக்கோட்டில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அங்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களுக்குள் தண்ணீர் சென்றது.

இதனால் நோயாளிகள், பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். வார்டுகளுக்குள் தேங்கிய தண்ணீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டன. ஆஸ்பத்திரி வார்டுகள் முழுவதும் சகதியாக காணப்பட்டது. இதனால் துப்புரவு பணியாளர்கள் இரவு முழுவதும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள்.

கேரளாவில் பெய்துவரும் மழைக்கு 4 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர். காசர்கோடு நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த பாலன்(வயது70), பூத்தோட்ட புத்தன்காவு பகுதியை சேர்ந்த சரசன்(62) ஆகிய இருவரும் மின்னல் தாக்கி பலியாகினர்.

கால்நடைகளுக்கு வைக்கோல் எடுத்துக்கொண்டு படகில் வந்த போது சரசனை மின்னல் தாக்கியது. இவர்கள் இருவரையும் சேர்த்து கேரள மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எணணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் கடலில் அலைகள் உயரமாக அடிக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News