இந்தியா

ஐதராபாத் அருகே லாரி கவிழ்ந்து விபத்து: பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை தூக்கி சென்ற பொதுமக்கள்

Published On 2024-05-23 05:03 GMT   |   Update On 2024-05-23 05:03 GMT
  • விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனியர் லேசான காயமடைந்தனர்.
  • மற்றொரு லாரி கொண்டு வரப்பட்டு மீதமுள்ள மது பாட்டில்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது.

போயன்பள்ளி அருகே உள்ள பால்பண்ணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரியின் டயர் திடீரென வெடித்தது. கட்டுப்பாட்டு இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த மது பாட்டில்கள் பெட்டி பெட்டியாக சாலையில் சிதறியது. உடைந்த மது பாட்டில்களில் இருந்து மது சாலையில் ஆறாக ஓடியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் கிளீனியர் லேசான காயமடைந்தனர்.

மது பாட்டில்கள் சாலையில் சிதறி கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் போட்டி போட்டு பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

தகவல் அறிந்த போயன்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு இருந்த பொதுமக்களை விரட்டியடித்தனர்.

மேலும் பொதுமக்கள் மது பாட்டில்களை எடுத்துச் செல்லாதவாறு லாரியை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மற்றொரு லாரி கொண்டு வரப்பட்டு மீதமுள்ள மது பாட்டில்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 15 சதவீத மது பாட்டில்கள் உடைந்து வீணானதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து மது பாட்டில்களை பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News