இந்தியா

திருமணக்கோலத்தில் சூரிய பிரகாஷ் - சந்தியா

பெண் தாசில்தாரை காதலித்து திருமணம் செய்த துணி வியாபாரி ஆணவக்கொலை

Published On 2026-02-28 08:34 IST   |   Update On 2026-02-28 08:34:00 IST
  • திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
  • காலையில் மணக்கோலத்தில் இருந்த கணவன், பிணமாக கிடந்ததை கண்டு சந்தியா அலறித்துடித்தார்.

ஆந்திர மாநிலம் அம்பேத்கார் கோனசீமா மாவட்டம் வேம்பள்ளியை சேர்ந்தவர் சூரியபிர காஷ் (வயது 41). உள்ளூரில் துணி வியாபாரம் செய்து வருகிறார்.

மேடபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா. ராயவரத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் காதலித்து வந்தனர்.

இந்த காதலுக்கு சந்தியா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்தனர். இந்த திருமணத்தில் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

திருமணம் முடிந்ததும் சந்தியாவை அழைத்துக்கொண்டு சூரியபிரகாஷ் வேம்பள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். இதனை அறிந்த சந்தியாவின் சகோதரர்கள் சந்திரபால், கிரிபாபு ஆகியோர் நள்ளிரவு சூரியபிரகாஷ் வீட்டுக்கு சென்று அவரை தாக்கினார்கள்.

பின்னர் இருவரும் சேர்ந்து பாறாங்கல்லை தூக்கி சூரியபிரகாசின் தலையில் போட்டனர். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

காலையில் மணக்கோலத்தில் இருந்த கணவன், பிணமாக கிடந்ததை கண்டு சந்தியா அலறித்துடித்தார். துணி வியாபாரி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் திரண்டுவந்து, சந்தியாவின் சகோதரர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபால், கிரிபாபு ஆகியோரை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த துணி வியாபாரி கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News