ஒடிசாவில் பயங்கரம்: நம்பி வந்த இளம்பெண்ணை கற்பழித்த காதலன்- மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற வாலிபர்
- காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
- இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது பெற்றோர், சகோதரருடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி வெளியில் செல்வதாக இளம்பெண் கூறி சென்றார்.
அதன் பிறகு அவரை காணவில்லை. இளம்பெண்ணின் வீட்டினர் அவரை பல இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக இளம்பெண்ணின் அண்ணன் டிர்டோல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மறுநாள் பாரதீப் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கீழே விழுந்த நிலையில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில் இறந்து கிடந்தது காணாமல் போன இளம்பெண் என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து மர்ம சாவு என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் தனது சகோதரி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் இளம்பெண்ணின் அண்ணன் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதையடுத்து ஜகத்சிங்பூர் எஸ்.பி. அங்கித் குமார் வர்மா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த சோம்நாத் ஓஜா என்ற வாலிபரை காதலித்து வந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஜகத்சிங்பூர் பாரதீப் பகுதியில் உள்ள சரளா கோவிலில் திருமணம் செய்து கொள்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சம்பவத்தன்று அந்த பெண் காதலன் சோம்நாத் ஓஜாவை கரம்பிடிக்க வீட்டைவிட்டு வெளியேறினார்.
ஜகத்சிங்பூர் கோவிலுக்கு புறப்பட்டு வந்த இளம்பெண்ணை சோம்நாத் ஓஜா ஒரு மறைவான இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு அந்த பெண்ணை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் அங்குள்ள ரஹ்மா பஸ் நிறுத்தத்தில் நிற்குமாறு கூறிவிட்டு சோம்நாத் ஓஜா ஓடிவிட்டார். இந்த வேளையில் அந்த வழியாக ஜார்க்கண்டின் தன்பாத்தைச் சேர்ந்த சுபம் குமார் என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அவர் அந்த பெண்ணிடம் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு நடந்த விவரத்தை கூறிய இளம்பெண்ணிடம் நானும் பாரதீப் பகுதிக்கு செல்கிறேன். அங்கு இறக்கி விடுகிறேன் என கூறி இளம்பெண்ணை லிப்ட் கொடுத்து அழைத்து சென்றார்.
செல்லும் வழியில் அந்த பெண்ணை சுபம் குமார் தான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் உள்ள வாடகை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பலவந்தமாக இளம்பெண்ணை வன்கொடுமை செய்தார்.
கதறி அழுத இளம்பெண் உடனே அங்கு உள்ளவர்களிடம் உதவி கேட்க முயன்றார். இந்த வேளையில் சுபம் குமார் உண்மை வெளியில் தெரிந்துவிடும் என்று கருதி திடீரென்று அந்த இளம்பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.
இதில் இளம்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி காதலியை வன்கொடுமை செய்து தவிக்க விட்டு சென்ற சோம்நாத் ஓஜா, லிப்ட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சுபம் குமார் ஆகிய 2 பேர் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலன் சோம்நாத் ஓஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவுகள் 87, 75(2), 79, 69, மற்றும் 64(2)(எம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சுபம் குமார் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண்ணுக்கு நடந்த இந்த சோக சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த சம்பவம் ஒடிசா அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.