தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு- சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

Published On 2024-05-23 05:18 GMT   |   Update On 2024-05-23 07:32 GMT
  • ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.
  • நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் கடந்த 2-ந்தேதி உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரில் தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மாயமானார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் 4-ந்தேதி காலையில் அவரது வீட்டின் பின்னால் இருக்கும் அவரது தோட்டத்தில் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமார் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மர்ம மரணம் என உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவரது மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்பதை உறுதிப்படுத்த முடியாத அளவுக்கு மர்மம் நீடித்து வந்தது.

இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சி பதிவுகள், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த பல்வேறு தடயங்களின் அடிப்படையில் போலீசாரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் என பலதரப்பட்டவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வந்தனர்.

அவரது உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் இரும்பு கம்பியால் சுற்றப்பட்டிருந்ததும், முதுகு பகுதியில் கடப்பாக்கல் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அதிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என உறுதியான முடிவை போலீசாரால் எடுக்க முடியவில்லை.

இதற்கிடையே அவரது டி.என்.ஏ. பரிசோதனை, உடல் எலும்புகள் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உயர்ரக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளுக்காக போலீசார் காத்திருந்தபோதும் தொடர்ந்து வேறு பல கோணங்களிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் 3 வாரம் ஆகியும் இந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் உலகராணி நியமனம் செய்யப்பட்டு, அவர் இன்று காலை மர்ம மரணம் என வழக்கினை பதிவு செய்துவிட்டு, விசாரணையை தொடங்கினார். 

Tags:    

Similar News