தமிழ்நாடு செய்திகள்

TN Assembly Election | தி.மு.க.வை ஓடஓட விரட்டுவதுதான் எங்கள் வேலை - சசிகலா

Published On 2026-03-13 13:59 IST   |   Update On 2026-03-13 14:15:00 IST
  • சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தென்னந்தோப்பு.
  • எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா? என்பது வருகிற தேர்தலில் தெரியும்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் சசிகலா இன்று கட்சி பெயரை அறிவித்தார்.

அந்த கட்சியின் பெயர் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம். இது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா மீது பற்றுக் கொண்ட தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சி என்றும் அதில் தன்னை இணைத்துக்கொள்வதாகவும் சசிகலா அறிவித்துள்ளார்.

கட்சியின் பெயரை அறிவித்த பிறகு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தி.மு.க. என்ற தீய சக்தியை வேரறுக்க தமிழகத்தை காக்க எம்.ஜி.ஆர். இயக்கத்தை தொடங்கினார். அதன் பிறகு ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரின் கொள்கைகளை வகுத்து மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்களை கொடுத்தார். அவர் பெண்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் நிறைய திட்டங்களை கொடுத்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் பிறகு எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. தமிழக மக்களை தி.மு.க. கசக்கி பிழிகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஜெயலலிதா பிறந்த நாளில் கழக கொடியை அறிமுகப்படுத்தினேன். தொண்டர் ஒருவர் ஆரம்பித்த கட்சியை எம்.ஜி.ஆர். நடத்தினார். எனக்கும் அந்த சூழ்நிலை வந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் பற்றுள்ள தொண்டர் ஒரு கட்சியை ஆரம்பித்து இருக்கிறார். அவர் ஆரம்பித்த கட்சியில் நான் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன். அந்த கட்சியின் பெயர் அனைத் திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்.

சட்டசபை தேர்தலில் இந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தென்னந்தோப்பு. இயற்கையாகவே எங்களுக்கு நல்ல சின்னம் அமைந்திருக்கிறது. நாங்கள் எப்போதுமே ஒற்றுமையை விரும்புகிறவர்கள். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தவிர வேறு எண்ணமே எனக்கு கிடையாது.

அதனால் நான் மக்களோடு இருப்பேன். அதற்கு இந்த சின்னமே ஒரு சான்று. ஒரு கூட்டுக் குடும்பம் போல் இந்த சின்னம் அமைந்திருக்கிறது. இது மக்களின் சின்னம்.

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டிலும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் வருவார்கள். அது உங்கள் வீட்டு சின்னம். அது மக்களுக்கான சின்னம். நிச்சயமாக தமிழக மக்கள் எங்களோடு இருப்பார்கள். புதுச்சேரி மக்களும் ஆதரவு தருவார்கள்.

சிலர் யாருமே கூட்டணியில் வேண்டாம், முக்கியஸ்தர்கள் கட்சியில் வேண்டாம் என்று தனியாக போவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. நாங்கள் கூட்டணியுடன்தான் தேர்தலை சந்திப்போம். நிச்சயம் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கணும். எங்கள் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே வந்தவர்கள். தமிழக மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்.

தனி மரம் தோப்பாகாது. நாங்கள் தோப்போடு வந்திருக்கிறோம். அந்த தோப்பு என்பது கழக தொண்டர்கள், தமிழக மக்கள். எடப்பாடி பழனிசாமி சாதித்தாரா? என்பது வருகிற தேர்தலில் தெரியும்.

எங்களுடன் ஒரே கருத்துள்ள கட்சிகள் இணைந்து கூட்டணியாக செயல்படுவோம். எங்களின் வாங்கு வங்கியை தேர்தல் முடிந்ததும் நீங்களே பார்ப்பீர்கள்.

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க 2 பிரதான கட்சிகளும் தீர்க்கவில்லை என்பதை மக்களிடம் எடுத்து சொல்லி வாக்குகளை பெறுவேன். இனி எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமையும். எங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பார்கள். அவர்கள் நியாயத்தை பார்ப்பவர்கள். முதுகில் குத்த மாட்டார்கள். நல்ல மனம் படைத்தவர்கள், நல்ல தீர்ப்பை அவர்கள் கொடுப்பார்கள்.

தி.மு.க. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளது. தி.மு.க. ஆட்சியை ஓட ஓட விரட்டுவதுதான் எங்கள் வேலை. அதற்காக தமிழ் நாட்டு மக்களை எங்களோடு சேர்த்துக் கொள்வோம். மக்கள் தான் இறுதி எஜமானர்கள். நான் முதலமைச்சர் வேட்பாளரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News