தமிழ்நாடு

தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்து எரிந்தது- ரூ.14 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2024-05-23 05:11 GMT   |   Update On 2024-05-23 05:11 GMT
  • மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் பருப்பு மூட்டையின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
  • லாரியை நிறுத்திய டிரைவர் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

முத்தூர்:

காங்கயம் அருகே தேங்காய் பருப்பு ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்ததில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் லாரி எரிந்து சேதமானது.

காங்கயம் அடுத்துள்ள சிவியார்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம். தேங்காய் களம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு உலர்த்தப்பட்ட சுமார் 15 டன் அளவுள்ள தேங்காய் பருப்புகளை மூட்டையில் கட்டி, அதனை எடைபோடுவதற்காக நால்ரோடு பகுதியில் உள்ள எடை மேடை நிலையத்திற்கு லாரியில் கொண்டு சென்றனர். லாரியை ராசிபுரத்தை சேர்ந்த தர்மலிங்கம்(47) ஓட்டிச் சென்றார். காங்கயம் அருகே பரஞ்சேர்வழி சிவியார்பாளையம் சாலையில் தனியார் கிரஷர் அருகில் சென்றபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் தேங்காய் பருப்பு லோடு உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் பருப்பு மூட்டையின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது. தேங்காய் பருப்பு மூட்டையிலிருந்து புகை வந்ததைக் கண்டவர்கள் உடனடியாக டிரைவரிடம் தெரிவித்தனர்.

லாரியை நிறுத்திய டிரைவர் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் தீ குபு குபுவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிந்து, பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தேங்காய் பருப்பு மூட்டைகள் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. எரிந்து சேதமான தேங்காய் பருப்பின் மதிப்பு ரூ. 14 லட்சம் மற்றும் லாரியின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News