இந்தியா

10-ம் வகுப்பில் 623மதிப்பெண்கள் பெற்ற கோர்ட் ஊழியருக்கு எழுத, படிக்க தெரியாததால் அதிர்ச்சி

Published On 2024-05-23 04:19 GMT   |   Update On 2024-05-23 05:06 GMT
  • பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார்.
  • பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகாவைச் சேர்ந்தவர் பிரபுலட்சுமிகாந்த் லோகரே (23). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் கொப்பல் நீதிமன்றத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கோர்ட்டுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பியூன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தூய்மை பணியாளராக வேலைபார்த்து வரும் பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 10-வது படித்து முடித்ததாக கூறி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்தார். அதில் அவர் 625 மதிப்பெண்களுக்கு 623 மதிப்பெண் (99.5 சதவீதம்) பெற்றதாக இடம் பெற்றிருந்தது.

இதன் அடிப்படையில் பிரபுலட்சுமிகாந்த் லோகரேவுக்கு கோர்ட்டில் ஊழியராக வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தான் தூய்மை பணியாளராக வேலை பார்த்த கோர்ட்டிலேயே ஊழியராக பணியை தொடங்கினார். இந்த நிலையில் அவர் படிப்பதற்கும், எழுதுவதற்கும் திணறியது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அந்த ஊழியரை வரவழைத்து நீதிபதி முன்பு வாசிக்க வைத்தனர். அப்போதும் அவர் திணறினார்.

இதையடுத்து அவரது கல்வி சான்றை பார்த்தபோது 7-ம் வகுப்பில் இருந்து அவர் நேரடியாக 10-ம் தேர்வு எழுதி அதில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றிருப்பதும் தெரியவந்தது. ஆனாலும் அவருக்கு கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் படிக்கவோ, எழுதவோ தெரியாததால் அவரது கல்விச் சான்றிதழ் தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மோசடி நபர்களால் திறமையான மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில் இதேபோல் பணிக்கு சேர்ந்த மற்றவர்களின் கல்வி சான்றிதழின் உண்மை தன்மையை கண்டறியவும் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் போலீசார் பிரபுலட்சுமி காந்த் லோகரேவின் கையெழுத்தையும், 10-ம் வகுப்பு தேர்வு விடைத்தாளில் உள்ள கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே பிரபுலட்சுமிகாந்த் லோகரே தான் 2017, 2018-ம் ஆண்டில் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் தேர்வானதாகவும், அந்த தேர்வுகள் டெல்லி கல்வி வாரியம் நடத்தியதாகவும் தெரிவித்து உள்ளார். 10-ம் வகுப்பு தேர்வில் 99.5 சதவீத தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்த கோர்ட்டு ஊழியருக்கு எழுத, படிக்க தெரியாத சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News