செய்திகள்

நிதிஷ் குமாரின் முடிவு ‘அரசியல் தற்கொலை’ - லாலு காட்டம்

Published On 2017-08-08 11:09 GMT   |   Update On 2017-08-08 11:09 GMT
பா.ஜ.க. ஆதரவுடன் பீகாரில் மீண்டும் ஆட்சி அமைத்த நிதிஷ் குமாரின் முடிவு அரசியல் தற்கொலைக்கு சமமானது என ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் மிகப்பெரும் அரசியல் திருப்பமாக கடந்த மாதம், ராஷ்டரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இருந்த கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மறுநாளே, பா.ஜ.க. ஆதரவுடன் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். நிதிஷ் குமார் முதல் மந்திரியாகவும் பா.ஜ.க.வை சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்று கொண்டனர்.

இவ்விவகாரம் தொடர்பாக மவுனம் காத்துவந்த ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாரின் முடிவு அரசியல் தற்கொலைக்கு சமமானது என தற்போது குறிப்பிட்டுள்ளார்.

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லாலு கூறியதாவது:-

அரசியலில் என்னைவிட அனுபவசாலி என்று நிதிஷ் குமாரை நான் கருதி வந்தேன். எனது கருத்து தவறானது என்பதை அவர் நிரூபித்து விட்டார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.

பா.ஜ.க.வுடன் கைகோர்த்து அவர் அரசியல் தற்கொலை செய்து கொண்டார். அரசியல்ரீதியாக அவரது கதை முடிந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இரண்டு இடங்களுக்கு மேல் வெற்றிபெறப் போவதில்லை. தந்திரவாதியாகவும் போர்க்களத்தை விட்டு பயந்து ஓடும் சுபாவம் கொண்டவருமான நிதிஷ் குமாரை இனி எந்த அரசியல் கட்சியும் நம்பாது.
Tags:    

Similar News