செய்திகள்
கனிமொழி எம்.பி. பேசியபோது எடுத்த படம்.

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு

Published On 2019-10-07 09:33 GMT   |   Update On 2019-10-07 09:33 GMT
மத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
விழுப்புரம்:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மகளிரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.வ.வேலு, நேரு மற்றும் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியின்போது தான் பெண்கள் முன்னேற்றத்துக்கான அனைத்து திட்டங்களும் கொண்டு வரப்பட்டது. இலவச கியாஸ் அடுப்பு, திருமண நிதி உதவி, 33 சதவீத இடஒதுக்கீடு, மகப்பேறு நிதி உதவி, முதியோர் ஓய்வூதியம், பெண்கள் சுய உதவிக்குழு போன்ற அனைத்து திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

ஆனால் அ.தி.மு.க. அரசு, பெண்கள் முன்னேற்றத்திற்கு எதையும் செய்யவில்லை. மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசாத அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தான் தொடர்கிறது. தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை, பயன்படுத்தாமல் அ.தி.மு.க. அரசு அப்படியே மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டது.

மக்களுக்காக எதையும் கொண்டு வராத இந்த அரசாங்கத்தை நீங்கள் நினைத்தால் மாற்றியமைக்க முடியும். ஆகவே இந்த ஆட்சியின் அவல நிலையையும், தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் வீடு, வீடாக சென்று மக்களிடம் எடுத்துக் கூறுங்கள். இதை இடைத்தேர்தல் ஆக பார்க்காதீர்கள்.

மாற்றம் என்பது பெண்களால் நடக்கும் என்பதை இந்த தேர்தலில் நடத்திக் காட்டுங்கள். மு.க.ஸ்டாலினால் அடையாளம் காட்டி விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டம் முடிந்ததும் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த நாட்டில் ஜெய்ஸ்ரீராம் தவிர எதை சொன்னாலும் அது தேசத்துரோகமாக போய்விடும். திரைப்பட இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளார். ஆனால் ஆளுங்கட்சியினர் வாயை திறக்கவே இல்லை. இதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்’ என்றார்.
Tags:    

Similar News