செய்திகள்

இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் வருவார்- ஸ்டாலின் பேச்சு

Published On 2019-02-24 16:26 GMT   |   Update On 2019-02-24 16:26 GMT
இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் வருவார் என்று தஞ்சை திராவிடர் கழக மாநாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். #mkstalin #rahulgandhi #dmk #parliamentelection
சென்னை:

திராவிடர் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு தஞ்சையில் நேற்று தொடங்கியது.  முதல் நாளான நேற்று காலையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டு கொடியை பொருளாளர் குமரேசன் ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த மாநாட்டு அரங்கை செயலவை தலைவர் அறிவுக்கரசு திறந்து வைத்து பேசினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார்.

பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குனர் டாக்டர் கவுதமன், சமூக நீதி, வரலாற்று கண்காட்சியை திறந்து வைத்தார். மாநாட்டிற்கு துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் படத்தை தமிழர் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், நாகம்மையார், மணியம்மையார் படத்தை துணைத்தலைவர் ராஜகிரி தங்கராசு, சுயமரியாதை சுடரொளிகள் படத்தை பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன தலைவர் சண்முகம் ஆகியோர் திறந்து வைத்து பேசினர்.

மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கருத்தரங்கம், பேரணி நடைபெற்றது. பேரணி தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி மாநாட்டு திடலை அடைந்தது. பேரணியை மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தொடங்கி வைத்தார்.

இன்று 2-வது நாள் சமூக நீதி மாநாட்டில் கலந்து கொண்ட  திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

திமுகவும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி எத்தனை காவிகள் வந்தாலும், எத்தனை மதக்கட்சிகள் வந்தாலும் திராவிடத்தை வீழ்த்த முடியாது. சமூக நீதியை காப்பாற்ற மாநாடு மட்டுமல்ல போராட்டமும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மோடியால் இனி பிரதமர் ஆகவே முடியாது,  இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் வருவார்.

பொருளாதார ரீதியான இடஒதுக்கீட்டிற்கு அப்போதே பிரதமர் நேரு எதிர்ப்பு தெரிவித்தார். பொருளாதார அளவுகோல் என்பது மாறிவிடும். அதனால்தான் அன்றே பொருளாதார அளவுகோல் கருத்தில் கொள்ளப்படவில்லை. ஏற்கனவே இந்த சட்டம் பாராளுமன்றத்தில் ஒருமுறை தோல்வியை தழுவி இருக்கிறது.

முன்னாள் நீதிபதி சின்னப்ப ரெட்டி இது வறுமை ஒழிப்பு திட்டம் இல்லை, இது சமூக நீதி திட்டம் என்றார். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை குழி தோண்டி புதைப்பதாகும். மக்களின் வாக்குகளை பெற 10% இடஒதுக்கீட்டை தந்திரமாக பிரதமர் மோடி பயன்படுத்துகிறார். 

டெல்லியில் எங்கள் விவசாயிகள் போராடிய போது மோடி எதுவும் செய்யவில்லை. தமிழக விவசாயிகள் டெல்லியில் நிர்வாண போராட்டம் கூட நடத்தினார்கள். ஆனால் மோடி ஒருவரையும் கூட அழைத்து பேசவில்லை. எல்லா விவசாயிகளை அவர் அவமானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினார்.

ஆனால் விவசாயிகளுக்காக கருணாநிதி ஆட்சியில் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில்தான் அப்போதே அப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களை திமுக தள்ளுபடி செய்தது. மொத்தம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அப்படியே விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்தார். இதனால் அதிமுகவினர்தான் அதிக பலன் பெற்றார்கள்.

மக்களிடம் மோடி பணத்தை பிடிங்கிவிட்டு, இப்போது விவசாயிகளுக்கு கொடுப்பதாக நடிக்கிறார். மோடியால் இந்தியா 15 வருடம் பின்னோக்கி சென்றுள்ளது. மோடி இனி பிரதமர் இருக்கையில் அமரவே முடியாது. ராகுல் காந்திதான் பிரதமர் ஆவார். அடித்து சொல்கிறேன். தமிழகம் தான் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார். #mkstalin #rahulgandhi #dmk #parliamentelection
Tags:    

Similar News