செய்திகள்

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: தமிழிசை

Published On 2019-02-10 01:46 GMT   |   Update On 2019-02-10 01:46 GMT
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #TamilisaiSoundararajan #DMK #Congress
சென்னை :

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒட்டுமொத்தமாக மோடியின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி முடிந்து, மீண்டும் தொடர போகிறதே என்ற ஆதங்கத்திலும்தான் ரபேல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து உள்ளன. எந்த தவறும் நடக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் நிரூபணம் ஆகியுள்ளது. பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளும், ராணுவ மந்திரியும் தெளிவாக விளக்கத்தை தந்து உள்ளனர்.

நாங்கள் ஊழல் செய்ய மாட்டோம். ஊழல் செய்பவர்களை விடமாட்டேன் என்று மோடி கூறியுள்ளார். உண்மை எப்போதும் வெளியே வரும். அது பாரதீய ஜனதாவிற்கு சாதகமாக இருக்கும்.

20 லட்சம் ஏழை மக்களின் பணத்தை சுருட்டிய சாரதா சீட் நிறுவனத்தில் மம்தா கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. மோடிக்கு மம்தாவின் நற்சான்று தேவையில்லை. எல்லாவிதத்திலும் ஊழல் ஒழிக்கப்பட்டு இருப்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

டெண்டர்கள் எல்லாம் இ.டெண்டரில் நடக்கிறது. தொழில் முனைவர்கள் இடைத்தரகர் மூலம் சென்றால் தான் அனுமதி கிடைக்கும். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின் நேரிடையாக சென்றாலே தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். இனிமேல் தான் ஊழலற்ற தன்மையின் இனிப்பை மக்கள் சுவைக்க போகிறார்கள். ஊழல் அரசியல் செய்தவர்களுக்கு இது கசப்பாகத்தான் இருக்கும். அதைத்தான் மம்தா போன்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.



தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான பிறகு அழகிரி, காங்கிரஸ் கட்சியைவிட பாரதீய ஜனதா மீதுதான் கவலைப்படுகிறார். ராகுலைவிட மோடி மீது அக்கறை காட்டுகிறார். காங்கிரஸ் கட்சியில் நிறைய கோ‌ஷ்டி இருக்கிறது. அழகிரி காங்கிரஸ் கட்சி வேலையை பார்த்தால் நன்றாக இருக்கும்.

கையை அழுக்காக்கிக்கொள்ள போவதில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இப்போது கூட்டணி பற்றி வரும் தகவல்கள் அனைத்தும் யூகங்கள்தான். எந்த கூட்டணியும் முழுமையாக நிறைவடையவில்லை. பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஆனால் அவருடன் கூட்டணி, இவருடன் கூட்டணி என்பது யூகங்கள்தான்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க அனைத்து முயற்சிகளையும் பாரதீய ஜனதா செய்து வருகிறது.

தங்கள் கூட்டணி பற்றி கவலைப்படாமல் அடுத்த கட்சிகளின் கூட்டணி பற்றி திருமாவளவன் கவலைப்படுகிறார். பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க. விரும்பவில்லை என்று சொல்வதற்கு இவர் யார்?. காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் பாரதீய ஜனதா கட்சி பற்றி சிந்திப்பது பாரதீய ஜனதா பலம் பெற்று வருகிறது என்றுதான் அர்த்தம்.

கூட்டணிக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் கூட்டணி பற்றி தகவல் தரப்படும். திருப்பூரில் பிரதமர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 8 பாராளுமன்ற தொகுதி கட்சியினர்தான் பங்கேற்கின்றனர். பாரதீய ஜனதா எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு மதுரையில் காட்டினோம். மீண்டும் திருப்பூரில் காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #DMK #Congress
Tags:    

Similar News