செய்திகள்

முக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி

Published On 2018-12-14 06:39 GMT   |   Update On 2018-12-14 07:39 GMT
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். #DMK #MKStalin #SenthilBalaji
சென்னை:

கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுபற்றி செந்தில்பாலாஜி உறுதியான தகவல்களை தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

அ.ம.மு.க.வை சேர்ந்த தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, அரூர் முருகன், சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்டோர் செந்தில் பாலாஜியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். எனினும் அது பலன் அளிக்கவில்லை.

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவுடன் செந்தில் பாலாஜி விமான நிலையத்தில் இருந்து ஒன்றாக வெளியே வருவது போன்ற புகைப்படம் வெளியாகி அவர் தி.மு.க.வில் சேரப்போவதை உறுதி செய்தது.

அதேபோல் கரூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற செந்தில் பாலாஜி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே, தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும், அது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் தி.மு.க.வில் சேர தன்னுடன் வருவதற்கான ஏற்பாடுகளையும் செந்தில்பாலாஜி மேற்கொண்டார். பெரும்பாலான நிர்வாகிகள், உறுப்பினர்கள் தி.மு.க.வில் சேர ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் கரூர் வெங்க கல்பட்டி, வேலாயுதம்பாளையம், தோகைமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து கார், வேன், மினிபஸ்கள் மூலம் சென்னை புறப்பட்டனர்.

அப்போது காரில் ஏற்கனவே ஒட்டியிருந்த சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரின் ஸ்டிக்கர்களை கிழித்து எறிந்தனர். இன்னும் சிலர் தங்களது சட்டைப்பையில் வைத்திருந்த டி.டி.வி.தினகரன், சசிகலா புகைப்படம் உள்ளிட்டவற்றையும் தூக்கி வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



அப்போது அவர்கள் கூறுகையில், செந்தில் பாலாஜியுடன் சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளோம். அப்போது எங்களது அரசியல் நிலைப்பாட்டை எடுத்து கூறுவோம். நாங்கள் தி.மு.க.வில் இணையும் வகையிலான பிரமாண்ட விழா கரூரில் ஏற்பாடு செய்யப்படும். அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுவார். கரூரை பொறுத்தவரையில் தி.மு.க.வின் இளைய தலைமுறையினரிடம் செந்தில்பாலாஜிக்கு அமோக வரவேற்பு உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

இதனால் செந்தில்பாலாஜி அவரது ஆதரவாளர்களுடன் இன்று சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இணைவது உறுதியானது. அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் அ.ம.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோரும் தி.மு.க.வில் சேர்ந்தனர். அவர்களை வரவேற்று உறுப்பினர் அட்டைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழா முடிந்த பிறகு, கரூரில் நடைபெறவுள்ள செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் இணைப்பு விழா தி.மு.க.விற்கு வலிமை சேர்க்கும் விதமாக இருக்கும் என தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர். #DMK #MKStalin #SenthilBalaji
Tags:    

Similar News