செய்திகள்

தமிழக அரசின் அறிக்கையை பெற்று உரிய உதவிகள் வழங்கப்படும்- பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2018-11-19 05:07 GMT   |   Update On 2018-11-19 05:07 GMT
கஜா புயல் பாதிப்பு குறித்து மாநில அரசு ஆய்வு செய்து சேத அறிக்கையை அளித்தபின் மத்திய அரசு ஆய்வு செய்து உரிய உதவிகளை அளிக்கும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #GajaCyclone #BJP
தூத்துக்குடி:

மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வ.உ.சிதம்பரனார் காட்டிய வழி அப்பழுக்கற்ற தேசபக்தி, நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்பது, நாட்டுக்காக வாழ்வது ஆகும். இதனை மனதில் கொண்டு பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து தொடங்கி தூத்துக்குடி, ராமேசுவரம் வழியாக சென்னை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் கைவிடப்படவில்லை. அதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்துதல் பணி மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்கனவே எவ்வளவு செலவு எதிர்பார்க்கப்பட்டதோ அதைவிட குறைந்த செலவில் சிறந்த முறையில் ஆழப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.


கஜா புயல் தொடர்பாக தமிழக அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளது. முதல் நாளில் குறிப்பாக புயல் தாக்கிய சில மணி நேரங்களிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடம், உணவு, சுகாதாரம் போன்ற பணிகளை உடனடியாக செய்திருந்தார்கள். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் உள்ளனர். மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசை பொறுத்தவரை ஏறக்குறைய 70 கப்பல்கள் உடனடியாக கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் புயலில் பாதிக்காத வகையில் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் புயல் பாதிப்பு ஏராளம் உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டியதும் உள்ளது. முதலில் மாநில அரசு ஆய்வு செய்து சேத அறிக்கையை அளிப்பார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஆய்வு செய்து உரிய உதவிகளை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #BJP #PonRadhakrishnan #Centralgovt #TNGovt
Tags:    

Similar News