செய்திகள்

திருச்சி அருகே லாரி-வேன் மோதிய விபத்தில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்ற இளம்பெண் இன்று பலி

Published On 2017-12-19 10:26 GMT   |   Update On 2017-12-19 10:26 GMT
திருச்சி அருகே லாரி மீது வேன் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.
திருச்சி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 70). இவரது உறவினர்களான கோட்டாறு, வடசேரி பகுதியை சேர்ந்த 16 பேர் கடந்த 6-ந்தேதி மாலை ஒரு டெம்போ வேனில் திருப்பதி புறப்பட்டனர். இதில் 8 ஆண்கள், 5 பெண்கள், 2 குழந்தைகள் பயணம் செய்தனர்.

வேனை ஆரல்வாய்மொழியை சேர்ந்த ராகேஷ் (33) என்பவர் ஓட்டிச்சென்றார். அன்று இரவு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த மூரணிமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்த முயன்ற போர்வெல் லாரியின் பின்புறம் டெம்போ வேன் பயங்கர வேகத்தில் மோதியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியும், கண்ணாடி, வேனின் பாகங்கள் குத்தியும் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த டிரைவர் ராகேஷ், கார்த்திக் (12), தானம்மாள் (42), வடசேரி வைஷ்ணவி (21), வேலாதேவி (35) ஆகியோர் பலத்த காயங்களுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் வைஷ்ணவி தவிர மற்றவர்கள் குணமடைந்து சொந்த ஊர் திரும்பினர்.

வைஷ்ணவிக்கு கழுத்து மற்றும் முதுகெலும்பு முறிந்தது. கழுத்தை நிமிர்த்த கூட முடியாமல் அவதிப்பட்ட அவருக்கு நரம்பியல் சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News