செய்திகள்

தஞ்சையில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி

Published On 2017-08-03 11:34 GMT   |   Update On 2017-08-03 11:34 GMT
தஞ்சையில் லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதில் ரியல் எஸ்டேட் அதிபர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த தளவாய் பாளையம் சீனிவாச நகரை சேர்ந்தவர் ஜோதிபேட்ரிக் (வயது44). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று இவர் தளவாய் பாளையத்தில் இருந்து தஞ்சை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மேம்பாலத்தில் லாரி நின்று கொண்டு இருந்தது. லாரியின் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருந்தது. ஜோதிபேட்ரிக் பாலத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ஜோதிபேட்ரிக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை பள்ளி அக்ரகாரம் சுங்கான் திடல் பெரிய தெருவை சேர்ந்தவர் மதியழகன். விவசாயி. இவர் தனது பேரன் ஹரிகரனுடன் (வயது12) மாட்டுவண்டியில் வயலுக்கு சென்றார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மாட்டு வண்டி மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஒரு மாடு பரிதாபமாக இறந்தது. இன்னொரு மாடு காயம் அடைந்தது. மேலும் மாட்டு வண்டியில் வந்த மதியழகன், ஹரிகரன் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் மோதியதில் மாட்டு வண்டி முற்றிலும் சேதம் அடைந்தது.
Tags:    

Similar News