செய்திகள்

புதுவை அரசை குறை கூற பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை: அமித்ஷா மீது நமச்சிவாயம் பாய்ச்சல்

Published On 2017-06-28 10:22 GMT   |   Update On 2017-06-28 10:22 GMT
ஊழலைப்பற்றி பேச பா.ஜனதாவுக்கும், அமித் ஷாவுக்கும் அருகதை உள்ளதா? என்று அமைச்சர் நமச்சிவாயம் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி:

பா.ஜனதா தலைவர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுவைக்கு வந்தார். புதுவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், புதுவை அரசு போல ஒரு ஊழல் அரசை வாழ்நாளில் பார்த்தது கிடையாது என்று விமர்சித்திருந்தார். இதற்கு புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது எதிர்கட்சி மாநிலம், ஆளும்கட்சி மாநிலம் என்ற பாரபட்சம் காட்டியது கிடையாது. அனைத்து மாநிலங்களும் முன்னேறினால்தான் நாடு முன்னேறும் என்ற கொள்கையோடு காங்கிரஸ் செயல்பட்டது. ஆனால் தற்போதைய பா.ஜனதா அரசு நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து இந்துத்வா கொள்கையை புகுத்தி காவி நாடாக மாற்றுவதில்தான் குறியாக உள்ளது.

இதனால் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரத்தை பறித்து துஷ்பிரயோகம் செய்வது, நிதி தராமல் அலைக்கழிப்பது என்ற மக்கள் விரோத செயல்களில்தான் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அண்டைமாநிலமான தமிழகம் மிகப்பெரும் உதாரணமாக உள்ளது.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டாக நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தக்கூட நிதியில்லாமல் தவித்து வருகிறோம். முதல்- அமைச்சரும், அமைச்சர்களும் டெல்லிக்கு பல முறை நடையாய் நடந்தும் இது வரைக்கும் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை.

மக்கள் நலனுக்காக பல்வேறு சிரமப்பட்டு நடை முறையில் உள்ள திட்டங்களை காங்கிரஸ் அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

ஆளும் அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் பா.ஜனதாவில் நியமிக்கப்பட்ட கவர்னரின் செயல் பாடுகளும் உள்ளது.

இதையும் தாண்டி முதல்- அமைச்சர் தன் அனுபவத்தாலும், மத்தியில் ஆட்சியாளர்களாக உள்ளவர்களிடம் தனிப்பட்ட நட்பாலும் மாநிலத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல அல்லும், பகலும் உழைத்து வருகிறார்.

வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கூறுவது போல பொதுவாக புதுவை அரசு ஊழலில் திளைக்கிறது என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

ஊழலைப்பற்றி பேச பா.ஜனதாவுக்கும், அமித் ஷாவுக்கும் அருகதை உள்ளதா? பா.ஜனதா தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் ஊழல் செய்து கையும், களவுமாக பிடிபட்டார். அவரை கைதும் செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசின் ஊழல் நாடு முழுவதும் பேசப்பட வில்லையா? இவை யெல்லாம் நடக்கும்போது அமித்ஷா எங்கிருந்தார்? திடீரென வானில் இருந்து குதித்ததுபோல புதுவை அரசை விமர்சித்து விட்டு போவது கண்டனத்திற்குரியது.

பா.ஜனதாவின் ஊழலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை எங்கள் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். விரைவில் மாற்றம் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News