search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் நமச்சிவாயம்"

    • வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர்.
    • அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    வேட்புமனுவோடு வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பு பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளனர். இதன்படி வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரம் வருமாறு:-

    பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தின் அசையும் சொத்து ரூ.28 லட்சத்து 12 ஆயிரத்து 52. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.6 கோடியே 87 லட்சத்து ஆயிரத்து 147. பூர்வீக சொத்து ரூ.3 கோடியே 7 லட்சத்து 460. மொத்த மதிப்பு ரூ.10 கோடியே 22 லட்சம். கடன் ரூ.6.94 கோடி.

    மனைவி வசந்தி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 40 லட்சத்து 44 ஆயிரத்து 624. சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ.11 கோடியே 30 லட்சத்து 97 ஆயிரத்து 371. பூர்வீக சொத்து ரூ.1 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரம். கடன் ரூ.8.99 கோடி. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ.1.58 கோடி.

    நமச்சிவாயம் மற்றும் அவரது மனைவி பெயரில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.25 கோடி ஆகும்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு அசையும் சொத்து ரூ.39 லட்சத்து 92 ஆயிரத்து 877. அசையா சொத்து ஏதும் இல்லை. கடன் ரூ.1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ.67 லட்சத்து 37 ஆயிரத்து 230. அசையா சொத்து ரூ.1 கோடியே 23 லட்சத்து 2 ஆயிரம். வீட்டு கடன் ரூ.28 லட்சம்.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு அசையும் சொத்தாக ரூ.2.86 லட்சம், தனி நபர் கடன் ரூ.40 ஆயிரம் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
    • பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது.

    இதற்காக 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டது. இந்த நிலையில் 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் பணிகள் முடிய 2 மாதங்களாகும். அதன்பிறகு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். நாளுக்கு ஒரு தானிய பிஸ்கட் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு அவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என்றார்.

    • பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.

    வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரையும் மற்றும் 11-ம் வகுப்புகளுக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் வாங்க ரூ.1 கோடியே 76 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    புத்தகங்கள் இன்று முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் தபால் வேன் மூலமாக அனுப்பும் பணி தொடங்கியது.

    இப்பணியை புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரில் சென்று பார்வையிட்டார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்கள் பெங்களுருவில் இருந்தும், தமிழ் பாடப் புத்தகம் தமிழக பாடநூல் கழகத்தில் இருந்து வந்துள்ளது. பள்ளி சீருடைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டது.

    தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வு செய்து கட்டணங்களை இறுதி செய்து வெளியிடுவார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் என்னை வந்து சந்தித்தனர். இது சம்பந்தமாக முதல்-அமைச்சர், துறைச் செயலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்.

    தமிழை கட்டாயப்பாடமாக்க என்னென்ன சாத்திய கூறுகள் இருக்கிறதோ, எந்தெந்த மாநிலங்களில் அதுபோன்று உள்ளதோ என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்போம்.

    இதில் இந்தி திணிப்பு எதுவும் இல்லை. அவரவர் விரும்பும் பாட மொழியை எடுத்து படிக்கலாம். இதைத்தான் படிக்க வேண்டும் என்று திணிப்பது தான் திணிப்பாகும்.

    இது தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகளை போக்க அனைத்து காலிப் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்" என்றார்.

    • 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
    • ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

    2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.

    2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.

    இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

    இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.

    தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.

    ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.

    தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

    தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.

    நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்
    • வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (16-ந்தேதி) முதல் 11 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (வியாழக்கிழமை)முதல் 26-ந் தேதி வரை 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
    • கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார்.

    புதுச்சேரி:

    ஏனாம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் தனது தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று குற்றம்சாட்டி காலவரையற்ற உண்ணாவிரத போராாட்டம் நடத்தி வந்தார்.

    அவரது உண்ணாவிரத போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. சுயேச்சை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர் போராட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசுவதற்காக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் ஏனாம் புறப்பட்டு சென்றனர்.

    தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கர், ரிச்சர்ட் ஆகியோர் சந்தித்தனர். அப்போது கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உறுதி கூறினார். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் நள்ளிரவில் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.

    • முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
    • அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.

    எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.

    புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட தமிழ்மணியும் அவருடன் வந்தவரும் காயமடைந்தனர்.
    • அந்த வழியாக காரில் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 40). புதுவை காவல்துறையில் மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் ஒதியம்பட்டு சாலையில் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்மணியும் அவருடன் வந்தவரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற அமைச்சர் நமச்சிவாயம், விபத்தில் காயமடைந்தவர்களை பார்த்தார்.

    உடனே தனது காரை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

    மேலும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை உடனடியாக வரவழைத்தார். அந்த வாகனத்தில் காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கையை எடுத்துள்ளது.
    • பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மின்துறையை தனியார் மயமாக்க, டெண்டர் கோரப்பட்டதை தொடர்ந்து மின் ஊழியர்களின் தனியார் மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கடந்த 28-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுவை, காரைக்கால் மாகி, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அந்தந்த பிராந்தியங்களில் உள்ள தலைமை அலுவலகங்களில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புதுவையில் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று 4-வது நாளாக வேலை நிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என அறிவித்திருந்தது.

    அதன்படி, நேற்று மாலை அண்ணாசிலை அருகில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி சுப்பிரமணியன், இந்திய தொழிற்சங்க மைய பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தை முதன்மை ஒருங்கிணைப்பாளர் தேவபொழிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மின் ஊழியர்கள் போராட்டத்தினால் புதுவை நகரம், புறநகர், கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையை சீரமைக்க பணியாளர்கள் இல்லாததால் மணிக்கணக்கில் மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அந்தந்த பகுதிகளில் சாலை மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் அதுபோல சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

    மின்துறை ஊழியர்கள் போராட்டத்தினால் தொழிற்சாலைகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. பெரிய தொழிற்சாலைகளில் ஜெனரேட்டர் வைத்து இயக்கி வருகின்றனர். ஆனால் சிறு தொழிற்சாலைகள் மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மின்தடை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கிடைக்காத தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே, மின்தடையை போக்கவும், பழுதுகளை சீரமைக்கவும் புதுவை அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக மத்திய பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுவைக்கு வர உள்ளனர்.

    அதுமட்டும் அல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் மின்தடையை சீரமைக்கும் பணியாட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓய்வுபெற்ற மின் தொழிலாளர்கள், ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    இவர்களை களத்தில் இறக்குவதன் மூலம் மின்தடையை சமாளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கவர்னர் தமிழிசை மின்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தார். இதனையும் மீறி மின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் சட்ட நடவடிக்கைகள் மூலம் எதிர்கொள்ளவும் அரசு தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இது. எனவே, மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் மின்தடையை ஏற்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. இதனை அரசு வேடிக்கை பார்க்காது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மின்தடையை சீரமைக்க அரசு பல நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் பொதுமக்களும் போராட்டங்களை கைவிட்டு அமைதி காக்க வேண்டும்.

    டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், ஒரே நாளில் மின்துறை தனியார் மயமாகி விடாது. எனவே, மின்துறை ஊழியர்கள் தங்களுடைய குறைகளை அரசிடம் வைக்கலாம். அவர்களது நலனை பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 38 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011-ம் ஆண்டு ஜூன் வரை பதவியில் இருந்தனர். அதன் பிறகு புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

    இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு புதுவை மாநில தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான தேதியை அறிவித்தது.

    இந்த நிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்தலட்சுமி என்பவர் பிறபடுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்தல் தேதி அறிவித்தும் தேர்தல் நடைபெறாமல் போனது.

    இதற்கிடையே புதுவை அரசு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசிடம் தருமாறு கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு மக்கள் தொகை விவரத்தை வழங்கவில்லை இதனால் 2011-ம் ஆண்டுக்கு பிறகு புதுவையில் 7 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பெருமாள் உள்ளாட்சி தேர்தலை நடத்த புதுவை அரசுக்கு உத்தரவிடுமாறு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு 4 வார காலத்துக்குள் பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்து தேர்தலை நடத்தி வெற்றி பெற்றோர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாய சூழல் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் இன்று தலைமை செயலகத்தில் உள்ள 4-வது மாடி கருத்தரங்கு அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில், உள்ளாட்சிதுறை செயலர் ஜவகர், இயக்குனர் மலர்க்கண்ணன், சட்டத்துறை சார்பு செயலர் முருகவேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பின் உத்தரவுகளை அமைச்சர் நமச்சிவாயத்திடம் அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். #tamilnews
    ×