search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தேர்தலுக்கு பயந்து ஓடிய நாராயணசாமியின் தோலை மக்கள் உரித்துவிட்டனர்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
    X

    தேர்தலுக்கு பயந்து ஓடிய நாராயணசாமியின் தோலை மக்கள் உரித்துவிட்டனர்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

    • முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி.
    • அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரகசியங்களை வெளியிடும் வகையில் தோலை உரிப்பேன் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து புதுவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் தோலை உரிப்பேன் என பேசியது நாகரீகமற்ற செயல். அவர் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். அவர் என்ன செய்தார்? என்பதை வெளியிட ரொம்பகாலம் ஆகாது. மாநில அந்தஸ்து தொடர்பாக ஏனாம் மக்களுக்கு நாராயணசாமி கடிதமே எழுதி கொடுத்துள்ளார். என் வாழ்நாள் உள்ள வரையில் மாநில அந்தஸ்தை ஆதரிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அவரின் தோல்தான் உரிந்துபோயுள்ளது. முதலமைச்சராக இருந்துவிட்டு, சட்டமன்ற தேர்தலில்கூட நிற்க திராணியற்று, பயந்து போய் ஒதுங்கியவர் நாராயணசாமி. அவர் தோலை மக்கள்தான் உரித்து காட்டியுள்ளனர். நாங்கள் மக்களோடு மக்களாக அவர்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகிறோம்.

    எங்கள் மக்கள் பணி தொடர்ந்து நடக்கும். அனைத்து அரசு பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். மத்திய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சி.பி.எஸ்.இ.பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும் தமிழ் பாடம் நிச்சயம் இருக்கும். தேவைப்படுவோர் தமிழை தேர்வு செய்து படிக்கலாம்.

    புதுவை, காரைக்காலில் உள்ளவர்கள் தமிழை தேர்வு செய்வார்கள். மாகியில் உள்ளவர்கள் மலையாளம், ஏனாமை சேர்ந்தவர்கள் தெலுங்கு பாடத்தை தேர்வு செய்யலாம். பெற்றோர்கள் சி.பி.எஸ்.இ பாடத்தில் சேர அதிகம் விரும்புகின்றனர். நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பாடத் திட்டத்தை அதிகளவு தேர்வு செய்கின்றனர். எனவே புதுவை மாநில மக்களின் தேவைகளை அறிந்தே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×