என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் இல்லை- அமைச்சர் நமச்சிவாயம்
    X

    த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் இல்லை- அமைச்சர் நமச்சிவாயம்

    • புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது.
    • கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்காகப் பயன்படுத்தும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மேலும் ஒரு சில சாலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கிறது.

    பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, போக்கு வரத்துத்துறையுடன் கலந்து பேசி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரப் பகுதி முழுவதும் சுற்றுலா வரும் 4 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லாமல் அரசு பஸ்சில் பயணம் செய்யும் வசதியை அறிமுகம் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறோம்.

    இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் விரைவில் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும். புதுச்சேரியில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படை 1 யூனிட் செயல்பட்டு வருகிறது. இதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் மேலும் ஒரு பட்டாலியன் படையைத் தொடங்க அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.

    ஏற்கெனவே புதுச்சேரியில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மேலும் ஒரு சிலர் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அவருக்குதான் அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது.

    த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புகலிடமாக இருப்பதாகத் தகவல் எதுவும் இல்லை. மேலும் அந்தக் கட்சி ஏற்கெனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்தது. இப்போது கரூர் சம்பவத்துக்குப் பிறகு அந்தக் கட்சியே கட்சி நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துள்ளது. மீண்டும் அனுமதி கேட்டால் அப்போது முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×