செய்திகள்

புயலில் சிக்கிய படகாக தமிழக அரசு தத்தளிக்கிறது: காதர்மொய்தீன்

Published On 2017-06-20 07:02 GMT   |   Update On 2017-06-20 07:02 GMT
தமிழக அரசு புயலில் சிக்கிய படகு போல் தத்தளித்து கொண்டிருக்கிறது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
திருச்சி:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் திருச்சியில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு புயலில் சிக்கிய படகு போல் தத்தளித்து கொண்டிருக்கிறது. அரசு எப்போது கவிழும் என்று தெரியாத நிலை உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.சமூக நீதி நிலை நாட்டப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற நிலை வேண்டும் உள்ளிட்டவை தமிழகத்தின் தத்துவம்.

தமிழகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் தலைவர்கள் என்பதை விட வழிநடத்தும் தத்துவம் எது என்பது தான் முக்கியம். இதை நிலை நிறுத்திய அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர் வழியில் செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தால்தான் இத்தத்துவம் நிலைக்கும்.

ஜனாதிபதி தலைவர் வேட்பாளர் குறித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் 17 கட்சிகள் ஒன்றுகூடி, பா.ஜனதா அறிவிக்கும் வேட்பாளரின் தன்மைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என அறிவித்தார். அதன் படி ஓரிரு தினத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை சோனியாகாந்தி அறிவிப்பார்.


ஜனாதிபதி தேர்தலில் ஒரு முறை வடக்கு பகுதியில் இருந்தும், மற்றொரு முறை தெற்கு பகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் பா.ஜனதா பாரம்பரிய மரபுகளை மீறி வடக்கில் இருந்து ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.

பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்து பாரம்பரிய மரபுகள் மீறப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் குழப்பத்தை பயன்படுத்தி பா.ஜனதாவின் கொள்கையை உட்புகுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதில் அவர்கள் வெற்றி பெற இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News