செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஆட்சியை பிடிக்க முடியாது- திருமாவளவன்

Published On 2018-12-22 10:21 GMT   |   Update On 2018-12-22 10:21 GMT
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கிறிஸ்துமஸ் விழாவில் திருமாவளவன் பேசினார். #thirumalvavan #BJP
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறித்தவ சமூக நீதி பேரவை சார்பில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. பேரவையின் தலைவர் பிச்சை தலைமை தாங்கினார்.

புனித அரசு, மனோ, ஆயர்கள் ஜான் ஜெயகரன் சாம்சன் ராசா மற்றும் மது கர்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரதம பேராயர் எஸ்றா சற்குணம், பேராயர்கள் ராஜாசிங், நீதிநாதன், எஸ்.எம்.ஜெயக்குமார், வி.ஜி.சந்தோ‌ஷம், வேலாயுதம், ஆயர்கள் சார்லஸ் சாம்ராஜ் சாம்சன், ஜோசப் மோகன் குமார், ஜோஸ்வா ஸ்டீபன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் கிறிஸ்துமஸ் கேக்கினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெட்டி பேராயர் மற்றும் ஆயர்களுக்கு ஊட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

அன்பையும் கருணையையும் போதிக்கின்ற வேதாகமம் உலகத்திலேயே அதிக மொழிகளால் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். கிறிஸ்தவர்கள் மதம் மாற்றம் செய்யவில்லை. பைபிளின் கோட்பாட்டின்படி செயல்படுகிறார்கள். இயேசு கிறிஸ்து அன்று சிலுவையில் கொல்லப்பட்டதன் மூலம் உலகம் முழுவதும் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு தனி மனிதனின் ஆற்றல் தான் உலகளவில் அன்பையும் சமாதானத்தையும் விதைத்துள்ளது. ஆதலால் தனி மனிதனின் தாக்குதலை தடுக்க முடியாது.

பதவிக்காக நாங்கள் இயக்கம் நடத்தவில்லை. மக்களை அதிகார வலிமை உள்ளவர்களாக மாற்றவும் விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக போராடுகிற கட்சி தான் விடுதலை சிறுத்தை. தனி மனிதன் அதிகாரம் பெற வேண்டும் என்பதைவிட மக்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகிறேன். தன்னலமற்ற 10 தலைவர்களை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சித்தும் அது ஈடேறவில்லை.

இயேசுவால் தேர்வு செய்யப்பட்ட 12 சீடர்களில் ஒருவன் துரோகம் செய்தான். அந்த காலத்திலேயே அவரால் சரியானவர்களை தேர்வு செய்ய முடியவில்லை. நான் எப்படி செய்ய முடியும் என்பது தான் கேள்வி. 10 பேராயர்கள் ஒன்றாக சேர்ந்து முடிவு எடுத்து விடுவதால் கிறிஸ்தவர்களிடம் ஒரே கருத்தை உருவாக்கிட முடியாது.

கடந்த காலங்களில் பட்டியல் இனமக்களை ஒன்றிணைக்கும் வகையில் அதன் தலைவர்களை வீடு வீடாக சந்தித்து சேர்ந்து செயல்பட முயற்சி எடுத்தும் அது பலன் அளிக்கவில்லை. தமிழகத்தில் 2 ஆண்டில் வெற்றியை அறுவடை செய்யலாம் என பிரதமர் மோடி பா.ஜ.க. நிர்வாகிகளோடு பேசியிருக்கிறார். இது வியப்பாகவும் வினோதமாகவும் இருக்கிறது.

தமிழகத்தில் அவர்கள் அறுவடை செய்ய வேர்களும் இல்லை, விதைகளும் இல்லை. எந்த அடிப்படையில் அறுவடை செய்வதாக மோடி பேசினார் என தெரியவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரையில் சாதிய மத சக்திகளுக்கு வாய்ப்பு இல்லை. அவர்கள் கத்தலாம், கூச்சல் போடலாம். ஆனால் தமிழக மண் ஒரு போதும் சனாதன சக்திகளுக்கு இடம் கொடுக்காது.

பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.-காங்கிரஸ் அணிக்கு தருகின்ற வெற்றி அதை உணர்த்தும் என நம்புகிறேன்.

நடிகர், நடிகை, தொழில் அதிபர் திருமணத்திற்கு செல்வதற்கு பிரதமருக்கு நேரம் இருக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையத்தில் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை, நிவாரணம் வழங்கவில்லை.

சிறுபான்மை மக்களுக்கு விடுதலை சிறுத்தை அரணாக இருக்கும். எந்த நிலையிலும் பின் வாங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட செயலாளர் ரா.செல்வம், பள்ளிக்கரணை பன்னீர் தாஸ், பெரம்பலூர் இரா.கிட்டு, வீர.ராஜேந்திரன், எழில் இமயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirumalvavan #BJP #Modi
Tags:    

Similar News