search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க ராணுவத்துடன் போரிட தலிபான் தீவிரவாதிகளுக்கு ரஷியா பண உதவி: ஆப்கான் குற்றச்சாட்டு
    X

    அமெரிக்க ராணுவத்துடன் போரிட தலிபான் தீவிரவாதிகளுக்கு ரஷியா பண உதவி: ஆப்கான் குற்றச்சாட்டு

    நேட்டோ படையின் மதிப்பை குறைக்கவும், ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிக்கவும் தலிபான் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ரஷியா பண உதவி செய்து வருவதாக ஆப்கான் அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
    மாஸ்கோ:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்க 2001-ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படைகள் அங்கு முகாமிட்டன. 14 ஆண்டுகளுக்கு பிறகு அவை அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டன.

    தற்போது அமெரிக்க ராணுவ வீரர்களில் சுமார் 15 ஆயிரம் பேர் மட்டும் ஆப்கானிஸ்தானில் தங்கி அந்நாட்டு வீரர்களுக்கு போர் பயிற்சியும், ஆலோசனைகளும் தாக்குதல்களுக்கு உதவியும் புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில், அமெரிக்க ராணுவத்துக்கு ரஷியா பண உதவி வழங்கி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    உஸ்பெகிஸ்தான் எல்லை வழியாக ரஷிய உளவுத்துறை தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளை செய்து வருகின்றனர்.

    அதற்காக அவர்கள் பணம் வாங்குவதில்லை. ஆனால் தலிபான்கள் இறக்குமதி வரி மட்டும் செலுத்தி அதை பெற்றுக் கொள்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் தலிபான் தீவிரவாத குழுக்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

    மாதந்தோறும் தலிபான் தீவிரவாதிகளுக்கு ரூ.16 கோடி அளவுக்கு பணம் கிடைக்கிறது. இந்த தகவலை தலிபான் தீவிரவாத அமைப்பின் பொருளாளர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி பரபரப்பு குற்றச்சாட்டாக கூறியுள்ளனர்.

    கடந்த 18 மாதங்களாக ரஷியா இத்தகைய உதவி செய்து வருகிறது. தொடக்கத்தில் குறைந்த டேங்கர் லாரிகளில் பெட்ரோல் அனுப்பி வந்தது. சோதனை முறையில் அது வெற்றி பெற்றதால் தற்போது ஏராளமான லாரிகளில் பெட்ரோல் டீசல் வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதை முறியடிக்கவும், நேட்டோ படையின் மதிப்பை குறைக்கவும், ஐ.எஸ். தீவிரவாதிகளை தோற்கடிக்கவும் ரஷியா இத்தகைய மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 1979-ம் ஆண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது ரஷியா படை எடுத்தது. அதில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி அளித்தன.
    Next Story
    ×