search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் தவறாக பேசுகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    அ.தி.மு.க. ஆட்சி குறித்து மு.க.ஸ்டாலின் தவறாக பேசுகிறார்: அமைச்சர் செல்லூர் ராஜூ

    எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சி குறித்து தவறாக பேசுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
    கோவை:

    கோவையில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார நிறைவு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    பொருளாதார முன்னேற்றத்துக்கு கூட்டுறவு அவசியம் என உணரப்பட்டு 1955-ம் ஆண்டு முதல் கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    சமத்துவம் மேம்பட கூட்டுறவு இயக்கம் உதவுகிறது. பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமல்லாது சமூக நீதியை உயர்த்துவது கூட்டுறவு இயக்கத்தின் நோக்கம். அந்த வகையில் ஏழை, எளிய மக்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக கூட்டுறவு இயக்கம் செயல்பட்டு வருகிறது.

    எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சி குறித்து தவறாக பேசுகிறார். அவர் ஒரே ஒரு குளத்தை தூர் வாரிவிட்டால் அனைத்து குளத்திலும் நீர்மட்டம் ஏறுமா? அ.தி.மு.க. அரசை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தரக்குறைவாக பேசி வருகிறார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் ஊழலையே இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர். ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு தான் தி.மு.க. அரசு. தமிழக அமைச்சர்களை கேவலமாக பேசுவதை மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    நீங்கள் என்ன மக்கள் சேவகரா? நமக்கு நாமே பயணம் என்று மக்களை ஏமாற்றுகிறீர்கள். ஆட்சியில் தவறு என்றால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். மக்கள் தான் எங்கள் எஜமானர்கள்.

    பள்ளிகளில் முட்டை போட வில்லை என தவறாக மு.க.ஸ்டாலின் சொல்கிறார். எங்கள் பாதை தெளிவானது. 2023 வி‌ஷன் திட்டப்படி, இன்னும் 4 ஆண்டுகள் மட்டுமல்ல அடுத்த முறையும் அ.தி.மு.க. ஆட்சி தான் கண்டிப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் எங்களுக்கு கோவில் போன்றது. அந்த வீட்டை அ.தி.மு.க.வினர் புனித தலமாக கருதி வருகிறோம். அங்கு வருமானவரித்துறை சோதனை நடத்தியது மன வருத்தத்தை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×