search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
    X

    அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #ADMK #OPS #Puthiyathamizhagam #Krishnasamy
    சென்னை:

    அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெறலாம் என்று காலையிலேயே தகவல் பரவியது.

    பேச்சுவார்த்தைக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் வரலாம் என கருதி போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

    காலை முதல் பத்திரிகையாளர்களும் ஓட்டல் முன்பு திரண்டு இருந்தனர்.

    இந்த நிலையில் காலை 11.30 மணியளவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வந்தார்.

    அடுத்த சில நிமிடங்களில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு வந்தார். அவரை ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றார்.



    அதை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும், டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கூட்டணி உடன்பாடு செய்துள்ளது. எங்கள் கூட்டணியில் பாராளுமன்ற தேர்தலில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கவும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் புதிய தமிழகம் முழு ஆதரவை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய, மாநிலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

    எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி எது? என்பதை பின்னர் அறிவிப்பார்கள். நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPS #Puthiyathamizhagam #Krishnasamy
    Next Story
    ×