search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசை மிரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா?- அரசு ஊழியர்களுக்கு எச்.ராஜா கண்டனம்
    X

    அரசை மிரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா?- அரசு ஊழியர்களுக்கு எச்.ராஜா கண்டனம்

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யாமல் அரசை மிரட்டி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதா? என்று அரசு ஊழியர்களுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். #JactoGeo #HRaja
    நாமக்கல்:

    நாமக்கல்லில் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் பிரதமருக்கு ஆளுமை இருக்கிறதாக சொல்லி இருக்கிறார், இது அவருடைய கருத்து.

    தமிழகத்தில் கஜா புயலை வைத்து அரசியல் ஆதாயம் தேட முயல்வது ஏற்புடைய வி‌ஷயம் அல்ல. இதற்கு முன்பாக எந்த ஒரு இயற்கை பேரிடராக இருந்தாலும் 20 நாட்கள், ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய ஆய்வுக்குழு வந்ததில்லை.

    இந்த தடவை 3-வது நாளிலேயே வந்து இங்கு ஒரு வாரம் இருந்து எல்லா இடமும் பார்த்துள்ளனர். அதுமட்டுமல்ல, தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கஜா புயலில் சிக்கிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறுமை கோட்டிக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்ட உடனடியாக பணியை தொடங்கச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.

    இதைத்தவிர வறுமை கோட்டிற்கு மேலே இருக்கிறவர்கள் வீடு இழந்தவர்களுக்கு தனி ஆர்டர் போட வேண்டும். ஓரிரு நாட்களில் மத்திய அரசாங்கம் அதற்கான உத்தரவை பிறப்பிக்கும்.

    6 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகள் 3 லட்சம் இருக்குமானால் கூட ரூ.6 ஆயிரத்து 300 கோடி ரூபாய்.

    இப்போது கொடுத்திருக்கிற 350 கோடி ரூபாய் என்பது தமிழக அரசின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒதுக்கப்பட்ட தொகை. மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தென்னை மரக்கன்றுகளை நான் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து விவசாயிகளுக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இப்படி மத்திய அரசு தொடர்ந்து நல்லது செய்து வருகின்றன.

    புயலில் 1 லட்சத்து 20 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தது. மின்வாரிய ஊழியர்கள் கொட்டுகிற மழையிலும் துரிதமாக மின்கம்பங்களை கொண்டு வந்து நட்டு வருகின்றனர். மின் வாரிய ஊழியர்களை நான் பாராட்டுகிறேன்.

    ஆனால் வாழ்நாள் முழுக்க 67 ஆண்டுகள் காசு சம்பாதிக்கிறதிலும், சொகுசு வாழ்க்கை அனுபவிப்பதிலும் செலவு செய்த கமல்ஹாசன் ஏதோ சினிமா சூட்டிங் எடுக்கிற மாதிரி கீழே விழுந்து கிடக்கின்ற மரத்தின் மீது காலை வைத்துக் கொண்டு மத்திய அரசாங்கம் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று பேசினால் என்ன அர்த்தம்?


    வாழ் நாள் முழுவதும் மக்களை வஞ்சித்து மோகத்தை காட்டி சுரண்டி வாழ்க்கை நடத்திய ஒரு நடிகர் மத்திய அரசை பற்றி பேசுகிறார். ஆகவே இந்த மாதிரியாக எரிகிற வீட்டில் பிடுங்கினவரை லாபம் என்று இருக்கக் கூடாது.

    ஜாக்டோ -ஜியோ அமைப்பினருக்கு எனது வேண்டுகோள், 6, 7 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதித்திருக்கும் போது மக்களுக்கு சேவை செய்யாமல் வேலை நிறுத்தம் என்று அரசாங்கத்தை மிரட்டினால் இது மனிதாபிமானமுள்ள செயலா? என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

    உங்களது கோரிக்கைகள் நியாயமாக இருந்தால் கூட வேலை நிறுத்தம் செய்வதற்கு இது நேரமில்லை.

    மின் இலகாவை சேர்ந்த ஊழியர்கள் மேற்கு வங்காளம், ஆந்திராவில் இருந்து வந்து புயல் பாதித்த பகுதிகளில் இரவு, பகலாக வேலை பார்க்கிறார்கள். ஆகவே இங்கிருக்கும் அரசு ஊழியர்கள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டும்.

    ஆனால் இங்கிருக்கின்ற தமிழக ஊழியர்களை தி.மு.க., தி.மு.க.வோடு இருக்கின்ற சில கட்சிகளும் தூண்டி விட்டதற்கு இவர்கள் ஆளாகி போய் வேலை நிறுத்தம் அறிவித்து இருப்பது சரியில்லை.

    எந்த கோரிக்கையாக இருந்தாலும் சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம். அரசாங்கம் எங்கேயேயும் ஓடி போறதில்லை. ஆகவே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

    ஜாக்டோ- ஜியோ தீர்மானத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலை பற்றி எதற்கு தீர்மானத்தில் போடுகிறீர்கள். உங்களது சம்பளமோ, கிராஜூட்டியோ, பென்சனோ அதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா?. இதற்கு என்ன அர்த்தம்?

    ஜாக்டோ-ஜியோ அமைப்பில் இவாலிஞ்சஸ் லிஸ்ட்டும், அர்பன் நக்சல்களும் நிர்வாகிகளாக இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடுகின்ற அனைத்து அரசு ஊழியர்களும் வெளியே வாருங்கள். இந்து விரோத தீய சக்திகளின் தலைமையில் இருக்கமாட்டோம் என்று வாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #HRaja
    Next Story
    ×