search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன திமுகவுக்கு மன்னிப்பே கிடையாது- அமைச்சர் உதயகுமார் பேச்சு
    X

    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன திமுகவுக்கு மன்னிப்பே கிடையாது- அமைச்சர் உதயகுமார் பேச்சு

    ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வுக்கு ஒருபோதும் மன்னிப்பே கிடையாது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார்.
    மதுரை:

    இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மதுரையில் நடந்தது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஜெயலலிதா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றினார்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபோது எல்லாம் மக்கள் விரோத ஆட்சி நடத்துவது தி.மு.க. தமிழகத்தை சூறையாடிய இந்த கட்சியை மக்களும் புறக்கணித்து எம்.ஜி.ஆரை முதல்வராக்கினார்கள். எம்.ஜி.ஆர். இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

    இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிளுக்கு பல்வேறு உதவிகளை செய்தார் எம்.ஜி.ஆர்.

    ஆனால் கருணாநிதி விடுதலைப்புலிகளை காட்டிக் கொடுத்தார். இறுதிக்கட்ட போரில் உண்ணாவிரத நாடகம் நடத்தி பல ஆயிரம் அப்பாவி மக்கள், குழந்தைகள் படுகொலைக்கு காரணமாக இருந்த கட்சி தி.மு.க.

    இப்போது உத்தமர் வேடம் போடுகிறார்கள். மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தளபதியாக இருக்கிறார். அவர் அ.தி.மு.க. அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார். புலியாக இருந்த கருணாநிதியாலேயே முடியவில்லை. பூனையாக இருக்கும் ஸ்டாலினால் அ.திமு.க.வை ஒன்றும் செய்ய முடியாது.

    ஊழல் செய்து ஆசியாவில் முதல் பணக்காரர் இடத்தை பிடித்தது யார்? என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. யார் ஊழல்வாதி என்று நிரூபிக்க ஒரே மேடையில் விவாதிக்க தயார்.

    எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். தினகரன் எங்களுக்கு எதிரி கிடையாது. இதனை வருகிற இடைத்தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் தி.மு.க.-காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகத்தில் அப்பாவி குழந்தைகள் கூட இலங்கையில் கொல்லப்பட்டனர்.

    அப்பாவி தமிழர்கள் கொலைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு முழு உதவி செய்தது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறி உள்ளார்.

    எனவே தான் போர் குற்றவாளிகளாக நிறுத்தி இந்த கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

    அ.தி.மு.க. அரசை வீழ்த்திவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவர் கூறும் குற்றங்களுக்கு எந்த முகாந்தரமும் இருக்கிறதா? என்றால் இல்லை.

    தமிழக மக்களை ஏமாற்றி பலகோடி சொத்துக்களை குவித்தது யார்? என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே உத்தமர் வேடம் போடுவதை தி.மு.க. நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஊழல் பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை போன தி.மு.க.வை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். மன்னிப்பே கிடையாது.

    இதற்கு ஒரு வாய்ப்பாக திருப்பரங்குன்றம் மக்கள் விரைவில் தி.மு.க.வுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம். எல்.ஏ. பேசியதாவது:-

    ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை தண்டிக்க வேண்டும் என்பது தான் உலகத் தமிழர்களின் கோரிக்கையாகும்.

    தி.மு.க. வீழ்கிற கட்சி. இனி அது ஒருபோதும் மக்கள் மன்றத்தில் வெற்றி பெற முடியாது. கட்சி தொண்டர்கள் எல்லாம் முதல்வராகி விட வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அது போல நம்மை விட்டு பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய ஒருவர் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். இதனால் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் நடக்காது.

    எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் அவர்கள் நிலைமை எப்படி முடிந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.

    அது போல தான் புதிதாக கட்சி தொடங்கியவர்களையும் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் துரைப் பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எல்.ஏ.க்கள் சரவணன், பெரிய புள்ளான், நீதிபதி, மாணிக்கம், கோபால கிருஷ்ணன் எம்.பி., திரவியம், எம்.எஸ்.பாண்டியன், சாலைமுத்து, வெற்றிவேல், பரவை ராஜா, சோலைராஜா, புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், நிர்வாகிகள் மாரிச்சாமி, கருப்புசாமி, கே.வி.கே. கண்ணன், பிரிட்டோ முத்துவேல், ஏ.பி.பாலசுப்பிரமணி, முத்துக்குமார், முனியாண்டி, முத்து ராமலிங்கம், கலைச் செல்வம், அபுதாகீர், ஐ.பி. எஸ்.பாலமுருகன், திருநகர் குமார், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×