search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு கூட்டம்"

    • விழிப்புணர்வு கூட்டம் நகராட்சி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மண்டல இயக்குனர் அறிவுரை யின்படி ஆணையாளர் முகமது சம்சுதீன் தலைமையில் கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் உரிமம் பெறுதல் தொடர்பான விவரங்கள் மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தல் குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

    • மருந்து வணிகர்கள் சமூக சீர்கேட்டிற்கு துணை போய்விடக்கூடாது என மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக உதவி இயக்குநர் பேசினார்
    • மருந்து வணிகர்கள் மருத்துவர் கையொப்பமிட்ட ரசீதுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும்.

    கரூர்:

    கரூரில் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறையின் திருச்சி மேற்கு மண்டலம் மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் போதைக்கு தவறாக பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகளை மருந்து வணிகர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மருந்து வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தலைவர் சௌகத்அலி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ரவி, புரவலர் வள்ளியப்பன், மொத்த மருந்து வணிகர் சங்கத்தலைவர் சேகர், துணைத்தலைவர் இளங்கார்த்திகேயன், துணைச் செயலாளர் பாலு, நிர்வாகி சாய்தங்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறையின் திருச்சி மேற்கு மண்டல உதவி இயக்குநர் அதியமான் பங்கேற்று பேசுகையில்:- மருந்து வணிகர்கள் மருத்துவர் கையொப்பமிட்ட ரசீதுக்கு மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும். மருத்துவரின் அனுமதிச் சீட்டுடன் வரும்போது மருந்து பொருட்கள் கொடுத்துவிட்டு அந்த சீட்டில் மருந்து வழங்கப்பட்டுவிட்டது என சீல் வைக்க வேண்டும்.

    சிலர் போலியான மருத்துவ சீட்டை கொண்டு வந்து மருந்து வாங்க வந்தால் உடனே மருந்துவத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் புனிதமான இந்த வணிகத்தை தவறாக பயன்படுத்திடக்கூடாது.சமூக சீர்கேட்டிற்கு துணை போய்விடக்கூடாது. தவறான செயலில் ஈடுபட்டால் மருந்து கடைக்கு சீல் வைக்கப்படும் என்றும், உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பையெல்லாம் அரசு வெளியிட்டுள்ளது. எனவே மருந்து வணிகர்கள் மருந்து விற்பனையில் கவனமாக இருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் மருந்து வணிகர்கள் திரளாக பங்கேற்றனர்.

    • நாடு முழுவதும் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக செயல்படுத்தப்படும்
    • மத்திய அரசு தொகுப்பில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அவர்களது ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி வாங்கலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், நாடு முழுவதும் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்தே ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக செயல்படுத்தப்படும் இத்திட்டம் பொதுமக்களுக்கு சிறந்த வகையில் உதவியாக அமைந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான அண்டை மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கின்றனர்.

    அவர்களில், 50 சதவீத குடும்பத்திற்கும் மேற்பட்டோர் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    மத்திய அரசு தொகுப்பில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் அவர்களது ரேஷன் அட்டைகளை பயன்படுத்தி வாங்கலாம்.

    அதேபோல் பல்வேறு மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்கள் ரேஷன் அட்டைகளில் முகவரி மாற்றமின்றி மத்திய, மாநில தொகுப்புகளின் கீழ் கிடைக்கும் அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி முகவரி மாற்றமின்றி அனைவரும் ரேஷன் பொருட்களை பெற்று பயன் பெறலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் (பொது வினியோக திட்டம்) குமார், சுந்தரம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்க ளுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
    • போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பிலும், திருச்செங்கோடு வக்கீல் மோகனா பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது. போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மலர்விழி பெண்களுக்கான பாதுகாப்பு என்ற தலைப்பிலும், திருச்செங்கோடு வக்கீல் மோகனா பெண்களுக்கான சட்ட உரிமைகள் என்ற தலைப்பிலும் உரை யாற்றினார்கள்.

    ெதாடர்ந்து மாணவிகள் கணிஷ்மா, தாரணி, கிருத்திகா, சந்தியா, ஆகியோர் பேசினர். இந்த கூட்டத்தில் பேராசிரியர்கள் அருணாசலம், வைரமணி, யுவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.
    • தேசிய வேளாண்சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் மற்றும் வியா பாரிகளுக்கான மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மத்திய அரசு வேளாண்மை விற்பனை மற்றும் மேலாய்வு இயக்குனரகத்தின் சென்னை அலுவலக துணை வேளாண் விற்பனை ஆலோசகர் கோவிந்த ரெட்டி, வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) நாசர் மற்றும் நாமக்கல் விற்பனை குழு செயலாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு

    மின்னனு தேசிய வேளாண்

    சந்தை திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த இயங்குதளம் மூலம் நடைபெறும் ஏலத்தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    இதில், விற்பனை ஆலோ சகர் கோவிந்தரெட்டி பேசுகையில், மத்தியஅரசு விவசாயிகள் நலன் கருதி வார்டு திட்டத்தின் கீழ் வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு நிதியை அதிக அளவில் வழங்கி உள்ளது. வேளாண்மை விற்பனை உட்கட்டமைப்பு நிதியில் பெண்களுக்கு 33.3 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். எனவே இத் திட்டத்தினை விவசாயிகள் மற்றும் வணிகர்கள் பயன்ப டுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் பரமத்தி வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்கா ணிப்பாளர் யோகானந்த், மேலாளர் ராஜாக்கண்ணு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • பாதிப்புகள் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வளரிளம் பருவத்தினர்கள் தன்னுரிமை மேம்பாடு, குழந்தை திருமணத்தை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இதில் மாநில குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சரண்யா சதீஷ், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி, வழக்கு பணியாளர்கள், விரிவாக்க அலுவலர், ஊர்நல அலுவலர்கள் பங்கேற்று, வளர் இளம் பெண்ணகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூக நலத்துறையின் திட்டங்கள் குறித்து விளக்க உரையாற்றினர்.

    மேலும், பெண்கள் பாதுகாப்பு குறித்த உதவி எண்களான 1098, 181, 14567, 14417 ஆகியவை குறித்து விரிவாக எடுத்து கூறப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போதை ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
    • உடல் நலனை கெடுத்துக் கொள்வதோடு, சுற்று வட்டார சமூகத்திற்கும் கேடு விளைவிக்கின்றனர்.

    பேரூர்,

    இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு, ஊராட்சி தலைவர் ஏ.சதானந்தம் தலைமை தாங்கினார். இதில், ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி கலந்து கொண்டு பேசும்போது பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் போதை ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்ற வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தங்களது உடல் நலனை கெடுத்துக் கொள்வதோடு, சுற்று வட்டார சமூகத்திற்கும் கேடு விளைவிக்கின்றனர். இறுதியில், மாணவர்கள் மனநோயாளியாக மாறிவிடும் நிலையும் உள்ளது.

    எனவே, ஒவ்வொரு பெற்றோரும் மாணவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து, நல்ல பழக்க, வழக்கங்களை கற்றுத் தர வேண்டும். போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து, போலீசுக்கு தகவல் தருபவர்கள் விபரம் ரகசியமாக வைக்கப்படும். சமூக நலனைக் கருத்தில் கொண்டு, போதை பொருட்கள் பயன்பாடு குறித்து, போதை பொருட்கள் விற்பவர்கள் குறித்து, எந்த வித தயக்கமும் இன்றி போலீசுக்கு தகவல் கொடுக்கலாம் என்றார்.

    தொடர்ந்து, ஊராட்சித் தலைவர் சதானந்தம் பேசும்போது போதைப் பொருட்கள் புழக்கத்தால், இளைஞர்களின் எதிர்காலமே பாழாகிவிடும். எனவே, நமது சமூகத்தின் நலன் கருதி, போதைப் பொருட்களின் ஒழிப்பு நடவடிக்கைக்கு, ஊராட்சி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். இதில் துணைத்தலைவர் பழனிச்சாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பங்கேற்பு
    • கிராம மக்கள் உள்பட போலீசார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் உள்ள பூசாரி வலசை கிராமம் மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிக்கடி சாதி மோதல் ஏற்பட்டு இந்த மோதல் சம்பவம் தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த இரு கிராமங்களிலும் இதுபோன்ற மோதல் போக்குகள் தொடர்ந்து நடைபெறக் கூடாது என வலியுறுத்தி பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தில் காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவின் சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, குடியாத்தம் தாசில்தார் எம். விஜயகுமார், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி அனைவரையும் வரவேற்றார்.

    இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திரா நகர் மற்றும் பூசாரி வலசை கிராம மக்களிடம் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக இருந்து நன்றாக படிக்க வேண்டும் வேலைவாய்ப்பில் இப்பகுதி சேர்ந்தவர்கள் அதிக அளவில் சேர வேண்டும், இப்பகுதியைச் சேர்ந்த வர்கள் சகோதரத்துவத்தோடு வாழ வேண்டும், இப்பகுதி மக்கள் ஒற்றுமையாக சாதி மோதல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று சமுதாய நல்லிணக்க விருது பெற கிராம மக்கள் சமுதாய நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.

    இப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் ஒற்றுமையுடன் சகோதரத்துவத்தோடு இருக்க வேண்டும் சிறு சிறு பிரச்சனைகளை பெரியவர்கள் சமாதானம் செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    இந்த கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனிடம் அளித்த மனுக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் இது குறித்து உரிய பரிசீலனை செய்யப்ப டுவதாக தெரிவித்தனர்.

    இந்த சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டத்தில் பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராகாந்தி, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர் பெரு மக்கள், காவல்துறை யினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருண்காந்தி உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.

    • பண்டிகை காலங்களில் பகல் நேரங்களிலும் காவலர்கள் நியமித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.
    • இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்.

    திருச்சி

    முசிறி காவல் நிலையத்தில் வியாபார நிறுவனத்திற்கு காவல்துறையினரால் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

    கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேசியதாவது :

    முசிறி நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் வியாபார நிறுவனங்கள் திடகாத்திரமான இரவு நேர காவலர்களை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். இதேபோன்று பண்டிகை காலங்களில் பகல் நேரங்களிலும் காவலர்கள் நியமித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும். கூட்டம் நிறைந்த பகுதிகளில் இயங்கும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்திட வேண்டும்.

    இரு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்.அனைத்து வியாபார கடைகளிலும் தீயணைப்பு சாதனங்களான ஈர சாக்கு, தண்ணீர் நிரப்பிய வாளி , மணல் நிரப்பிய வாளி போன்ற உபகரணங்கள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.

    • போதை பொருட்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.
    • ஒவ்வொரு ஊராட்சியும் வளர்ச்சியடையும் எனவும் தருமபுரி மாவட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

    தருமபுரி,

    தருமபுரியில் காவல் துறை சார்பில் போதை பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலைசெல்வன் தலைமையில் தருமபுரியில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து 251 ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் போதை பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், அதனை எவ்வாறு தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்களை கண்காணிக்க வேண்டும். அதே போல் அவர்களின் நடவடிக்கை குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    போதை பொருட்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்தும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்காணிக்க வேண்டும்.

    அப்போது தான் ஒவ்வொரு ஊராட்சியும் வளர்ச்சியடையும் எனவும் தருமபுரி மாவட்டத்தை போதை பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

    இந்த விழிப்புணரவு கூட்டத்தில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, இளங்கோ உட்கோட்ட காவல் துணை கங்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

    • விழிப்புணர்வு கூட்டம் இத்தலாரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மஞ்சூர்,

    மஞ்சூர் காவல்துறை சார்பில், கஞ்சா இல்லாத கிராமம் மற்றும் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இத்தலாரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இதற்கு மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எமரால்டு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இத்தலார் ஊர் தலைவர் சுரேஷ், இத்தலார் ஊராட்சி மன்ற தலைவர் பந்தையன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் உமாராஜன் மற்றும் சுற்றுவட்டார ஊர் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முடிவில் போதை ஒழிப்பு உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்தனர்.

    • நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூரிலுள்ள நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சார்பில் நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு தலைமை வகித்தார். குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் மயிலாடுதுறை சரக காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்து பேசினார்.

    தரக்கட்டுப்பாடு உதவி மேலாளர்அகோர மூர்த்தி, அரியலூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எந்தவித முறைகேடுகளும் நடைபெறா வண்ணம் விவசாயிகள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை கவனமுடன் சரிபார்த்து, நெல்லின் தரம், ஈரப்பதம் முதலிவற்றை தரவாக ஆய்வு செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அறிவிப்பு பலகை மற்றும் புகார் பெட்டியையும் மக்கள் பார்வையில்படும் படி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

    கூட்டத்தில் நெல்கொள்முதல் நிலைய மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×